விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் இடைத்தரகர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வோரை அனுமதிக்கக்கூடாது போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் அதிரடி உத்தரவு

விழுப்புரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் இடைத்தரகர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வோரை அனுமதிக்கக் கூடாது என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-06-15 18:45 GMT

விழுப்புரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சசாங் சாய், கடந்த மாதம் 25-ந் தேதியன்று பொறுப்பேற்றார். அவர் பொறுப்பேற்றதில் இருந்து காவல்துறையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் தற்போது போலீஸ் நிலையங்களில் பொதுமக்கள் அளிக்கும் புகார்களை உரிய முறையில் விசாரணை நடத்தி தீர்வு காண வேண்டும், எக்காரணத்தை கொண்டும் யாரிடமும் கையூட்டு பெறுதல், கட்டப்பஞ்சாயத்து செய்தல் போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும், மீறி ஈடுபட்டால் அவர்கள் மீது துறை ரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உத்தரவிட்டுள்ளார்.

அதோடு, சிவில் சம்பந்தமான புகார்களை போலீஸ் நிலையங்களில் விசாரிக்கக்கூடாது என்றும் நீதிமன்றம் சென்று நிவாரணம் தேடிக்கொள்ளுமாறு புகார்தாரர்களிடம் கூறுமாறும், இடைத்தரகர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வோரை போலீஸ் நிலையத்திற்குள் அனுமதிக்கக்கூடாது என்றும் போலீசாருக்கு அறிவுறுத்தியுள்ளதோடு, இதுசம்பந்தமான அறிவிப்பு நோட்டீசை அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பொதுமக்களின் பார்வையில் தெரியும்படி ஒட்ட வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

அறிவிப்பு நோட்டீசு

அதன்படி நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் இதுசம்பந்தமான அறிவிப்பு நோட்டீசை போலீசார் ஒட்டியுள்ளனர். இந்த நடவடிக்கையால், புகார்கள் மீது நியாயமான முறையில் விசாரணை நடத்தப்பட்டு விரைவில் உரிய தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதேநேரத்தில் போலீஸ் சூப்பிரண்டின் இந்த அதிரடி உத்தரவு, இடைத்தரகர்கள், கட்டப்பஞ்சாயத்து செய்வோர் மத்தியில் கிலியை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்