குட்கா, கஞ்சா விற்றால் குண்டர் சட்டத்தில் கைது போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் எச்சரிக்கை
கஞ்சா, குட்கா விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடைகளுக்கு ‘சீல்’ வைக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
ராணிப்பேட்டை,
கஞ்சா, குட்கா விற்பவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு கடைகளுக்கு 'சீல்' வைக்கப்படும் என ஆலோசனை கூட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்தார்.
ஆலோசனை கூட்டம்
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை முற்றிலும் அழிக்கும் பொருட்டு வியாபாரிகள் சங்கத்தினருடனான ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபா சத்யன் தலைமை தாங்கி பேசியதாவது,
'அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் கஞ்சாவை எவரேனும் விற்பனை செய்தாலோ அல்லது பதுக்கி வைத்தாலோ அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு, கடைகளுக்கு சீல் வைத்து, அவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டு அவர்களது சொத்து மற்றும் வங்கி கணக்கில் உள்ள பணம் முழுவதும் அரசுைடமையாக்கப்படும்.
இந்த வருடம் மொத்தம் 428 குட்கா வழக்குகளும் 80 கஞ்சா வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு 517 நபர்களை கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது, அதில் 18 பேர் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் படி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 28 பேரின் வங்கி கணக்குகள் முடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
வியாபாரிகள் உறுதி
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து வியாபாரிகள் சங்கத்தினரும் இனிவரும் காலங்களில் காவல்துறைக்கும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம் என்றும் கஞ்சா மற்றும் குட்கா இல்லாத மாவட்டத்தினை உருவாக்குவோம் என்றும் உறுதி ஏற்றனர்.
கூட்டத்தில் தலைமையிட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு விஸ்வேஸ்வரய்யா, ராணிப்பேட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு பிரபு மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் கலந்து கொண்டனர்.