கஞ்சா விற்பனை குறித்து போலீஸ் சூப்பிரண்டு அதிரடி சோதனை

காட்பாடி பகுதிகளில் கஞ்சா விற்கப்படுகிறதா என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அதிரடியாக சோதனை நடத்தினார்.

Update: 2022-12-16 17:12 GMT

காட்பாடி பகுதிகளில் கஞ்சா விற்கப்படுகிறதா என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் அதிரடியாக சோதனை நடத்தினார். மேலும் பல்வேறு பகுதிகளில் இளைஞர்களிடையே கஞ்சா பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் பழக்கம் தற்போது அதிகரித்துள்ளது. இதனை தடுக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கஞ்சா விற்பவர்களை கைது செய்து சிறையில் அடைக்கின்றனர். வேலூர் மாவட்டத்தில் சட்டம் ஒழுங்கு போலீசார் மற்றும் ரெயில்வே போலீசாரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். அண்டை மாநிலமான ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு பஸ் மற்றும் ரெயில்களில் கஞ்சா கடத்தி வரப்படுகிறது. இதனை தடுக்க அடிக்கடி பஸ் மற்றும் ெரயில்களில் போலீசார் தீவிர சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் நேற்று முன்தினம் இரவு காட்பாடி பகுதிகளில் கஞ்சா விற்கப்படுகிறதா என சோதனை அதிரடியாக சோதனை செய்தார். காட்பாடி, விருதம்பட்டு போலீஸ் நிலையங்களின் எல்லைக்குட்பட்ட பர்ணீஸ்புரம், காந்திநகர், கீழ்மோட்டூர் அசோக்நகர், மதிநகர், தாராபடவேடு ஆகிய பகுதிகளில் கஞ்சா, குட்கா போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுகிறதா என சோதனை செய்தார்.

விழிப்புணர்வு

அப்போது போதை பொருட்கள் ஒழிப்பு சம்பந்தமாக பொதுமக்கள் மற்றும் மாணவர்கள், இளைஞர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். காட்பாடி பள்ளிக்குப்பம் பகுதியில் இளைஞர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள உடற்பயிற்சி கூடத்தையும் அவர் பார்வையிட்டார்.

கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சேகர், காட்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, இன்ஸ்பெக்டர் தமிழ்ச்செல்வன், மாநகராட்சி கவுன்சிலர் விமலா சீனிவாசன் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்