கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்வித்த கோடை மழை

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மண்ணையும், மக்கள் மனதையும் குளிர்வித்த கோடை மழை குளிர்வித்தது.

Update: 2023-06-05 18:45 GMT


விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த 2 மாதமாக கோடை வெயில் பொதுமக்களை சுட்டெரித்து வந்தது. கூடவே அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் வாடி வதங்கினர்.

இந்த சூழலில் வெப்பச்சலனம் காரணமாக மாலை 5.30 மணியளவில் விழுப்புரம் நகரம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்தது. இந்த மழை பலத்த மழையாக கொட்டித்தீர்க்காமல் சுமார் ½ மணி நேரமாக சாரலாக தூறிக்கொண்டே இருந்தது. இதன் காரணமாக சாலைகளில் மழைநீர் வழிந்தோடியது. இதேபோல் திண்டிவனம், விக்கிரவாண்டி, திருவெண்ணெய்நல்லூர் என மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் நேற்று பரவலாக மழை பெய்தது.

நெல்மூட்டைகள் சேதம்

திருவெண்ணெய்நல்லூா் பகுதியில் பெய்த மழையால், ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வைக்கப்பட்டிருந்த ஆயிரத்துக்கும் அதிகமாக நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதமானது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். திருவெண்ணெய்நல்லூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நெல் மூட்டைகளை வைக்க இடவசதி இல்லாததால், ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தை மாற்று இடத்தில் இயங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பசுமாடு செத்தது

விக்கிரவாண்டி அடுத்த ஒரத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் மனைவி செங்கேணி(வயது 58), இவர் நேற்று மாலை 5.45 மணி அளவில் ரவிச்சந்திரன் என்பவர் நிலத்தில் தனது பசு மாட்டை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதில் மின்னல் தாக்கியதில் பசுமாடு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக செத்தது. இதுகுறித்து வருவாய்த்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தொடர்ச்சியாக கோடை வெயில் மக்களை வாட்டி வதங்க செய்து வந்தது. நேற்றும் அதேபோன்ற ஒரு வறண்ட வானிலையே நிலவியது.

திடீரென மாலையில் வானிலையில் மாற்றம் ஏற்பட்டு, வானில் மேக கூட்டங்கள் திரண்டன. மாலை 5 மணி அளவில் சூறைக்காற்று வீசியது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் கனமழை பெய்யதொடங்கியது. இந்த மழை இரவு 7 மணி வரைக்கும் நீடித்தது. இதனால் தாழ்வான பகுதியில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.

இதேபோன்று, திருக்கோவிலூர் பகுதியில் நேற்று மாலை 5 மணிக்கு மேல் குளிர்ந்த காற்றுடன், மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை சுமார்ஒரு மணி நேரம் நீடித்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. இதேபோன்று, சங்கராபுரம், சின்னசேலம் என்று மாவட்டத்தில் பிற பகுதிகளிலும் மழை நீடித்தது.

கோடையில் பெய்த திடீர் மழை, மண்ணையும், விவசாயிகளின் மனதையும் குளிர்வித்து சென்றது.

Tags:    

மேலும் செய்திகள்