உரிய விலை கிடைக்காததால் சின்ன வெங்காயத்துக்கு கிலோவுக்கு ரூ.20 இழப்பீடாக அரசு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர்.
கள் இறக்கி போராட்டம்
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க தலைவர் தண்டாயுதபாணி பேசியதாவது:-
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கொடுத்த விவசாயிகளுக்கு கரும்பு கொடுத்ததற்கான பணத்தை இன்னும் வழங்காமல் உள்ளனர். இதை விரைந்து வழங்க வேண்டும். தற்போது 900 ஏக்கர் பரப்பளவில் 400-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கரும்பை பயிர் செய்து அரவை ஆலையில் பதிவு செய்ய காத்துள்ளனர். எனவே அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை புனரமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். பி.ஏ.பி. அரணி வாய்க்கால் பல்வேறு இடங்களில் சேதமாகியுள்ளது.
கீழ்பவானி விவசாயிகள் நல சங்க தலைவர் நல்லசாமி:-
திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ள பனை, தென்னை மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கான உரிமம் திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் உள்ள கருப்பட்டி உற்பத்தியாளர்கள் சம்மேளனத்தில் கொடுக்கப்பட்டு வந்தது. தென்னையில் இருந்து நீரா பானம் இறக்குவதற்கு அரசாணை நடைமுறைக்கு வந்தது. அதன்பிறகு தென்னை நீங்கலாக பிற மரங்களில் இருந்து பதநீர் இறக்குவதற்கு உரிமம் மட்டுமே வழங்கப்படுகிறது. தென்னையில் இருந்து பதநீர் இறக்குவதற்கான உரிமத்தை மரமேறிகள் எங்கே பெற வேண்டும். தகுந்த அறிவிப்பு இல்லாத காரணத்தால் பல இடங்களில் பரவலாக உரிமம் பெறாமல் பதநீர் இறக்குவது நடைமுறையாகிபோனது. மாவட்ட நிர்வாகம் இதற்கு பதில் அளிக்க வேண்டும்.
கள் இறக்கி சந்தைப்படுத்தும் உரிமை மீட்பு அறப்போராட்டம் வருகிற ஜனவரி மாதம் 21-ந் தேதி முதல் நடத்தப்படும்.
வாய்ச்சப்பை நோய்
விவசாயி பெரியசாமி:-
குடிமங்கலத்தில் தென்னை நார் தொழிற்சாலை அனுமதியில்லாமல் செயல்படுகிறது. நார் கழிவுகளால் மக்கள் அவதியடைந்துள்ளனர். தனியார் வங்கிகள் மூலமாக மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கி விட்டு அதன்பிறகு கடனை வசூலிக்க மிகவும் சிரமப்படுத்துகிறார்கள். அதை கண்காணிக்க வேண்டும்.
தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகி அப்புசாமி:-
கால்நடைகளுக்கு வாய்ச்சப்பை நோய் தாக்குதலை தடுக்க கால்நடை பராமரிப்புத்துறை மூலமாக தடுப்பூசிகள் முறையாக செலுத்தவில்லை. காட்டுப்பன்றி, மயில்களால் பயிர்கள் சேதம் அடைகிறது. சேதமடைந்த பயிர்களுக்கு நஷ்ட ஈடு கிடைப்பதில்லை. காட்டுப்பன்றி, மயில்களை கட்டுப்படுத்த வனத்துறையினர் நடவடிக்கை இல்லை.
சின்ன வெங்காயத்துக்கு கிலோவுக்கு ரூ.20 இழப்பீடு
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன்:-
சின்ன வெங்காயம், பெரிய வெங்காயத்துக்கு ஏற்றுமதி எண் ஒன்றாக உள்ளது. வேளாண் வணிக விற்பனைத்துறையிடம் இதுகுறித்து தெரிவித்தும் நடவடிக்கை இல்லை. இதன்காரணமாக வெங்காய ஏற்றுமதிக்கு மத்திய அரசு வரி உயர்த்தியுள்ளது. இதனால் ஏற்றுமதி செய்ய முடியாததால் சின்னவெங்காயத்துக்கு உரிய விலை கிடைக்காமல் கிலோவுக்கு ரூ.20 நஷ்டம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் சின்ன வெங்காயம் அதிகம் சாகுபடி செய்யப்படுகிறது. இதனால் சின்ன வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும். மேலும் சின்ன வெங்காயத்துக்கு தனியாக ஏற்றுமதி எண் வழங்க, மாநில அரசு மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்.
கண்வலிக்கிழங்குக்கு உரிய விலை கிடைக்கவில்லை. ஆனால் புற்றுநோய்க்கு மருந்து தயாரிப்பில் பயன்படுத்தப்படுகிறது. மருத்துவ தாவரங்கள் மற்றும் மூலிகை நிறுவனம் மூலமாக கண்வலிக்கிழங்கை அரசே கொள்முதல் செய்ய வேண்டும். கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்கள் வாக்களிக்கும் உரிமையை பெற அவர்களின் ஆதார் எண், ரேஷன் கார்டு எண்ணை இணைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் பெரும்பாலான விவசாயிகளுக்கு தெரியாததால் வாக்களிக்க முடியாதநிலை ஏற்பட்டுள்ளது.
நல்ல தங்காள் அணைக்கு நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்படாமல் மாவட்ட நிர்வாகம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கும் வகையில் மேல்முறையீட்டு மனுவை அதிகாரிகள் திரும்ப பெற வேண்டும். குன்னத்தூர் அருகே குமரிக்கல்லை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.