தேன்கனிக்கோட்டையில் உயர்அழுத்த மின் கம்பத்தில் ஏறி முன்னாள் கவுன்சிலர் தற்கொலை மிரட்டல் போலீசார் விசாரணை
தேன்கனிக்கோட்டை
தேன்கனிக்கோட்டையில் உயர்அழுத்த மின் கம்பத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த முன்னாள் கவுன்சிலரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நில பிரச்சினை
கிருஷ்ணகிரி மாவட்டம் கெலமங்கலம் அருகே உள்ள காடுஉத்தனப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 42). முன்னாள் ஒன்றிய கவுன்சிலர். இவருக்கும், அஞ்செட்டி துர்க்கத்தை சேர்ந்த முனிராஜ் என்பவருக்கும் சொத்து பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இது தொடர்பாக கெலமங்கலம் போலீசில் இரு தரப்பிலும் புகார் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் நேற்று நேரில் சென்று கெலமங்கலம் போலீசார் விசாரணை நடத்தினர். இதில் திருப்தி இல்லாததால் ரவி தேன்கனிக்கோட்டையில் தேர்ப்பேட்டை உருது பள்ளி அருகே உள்ள உயர் அழுத்த மின் கோபுரத்தில் ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பேச்சுவார்த்தை
இதையடுத்து தேன்கனிக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் விரைந்து சென்று அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது நிலப்பிரச்சினை தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதி அளித்தார். இதையடுத்து அவர் கீழே இறங்கி வந்தார். தொடர்ந்து அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.