செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் திண்டிவனத்தில் பரபரப்பு

திண்டிவனத்தில் செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

Update: 2022-08-20 15:25 GMT


திண்டிவனம், 

திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் நெடுந்தெருவை சேர்ந்தவர் ஏழுமலை(வயது 57). விவசாயி. இவர் நேற்று மதியம் 1 மணிக்கு ஓமந்தூர் பஸ் நிறுத்தத்தில் உள்ள செல்போன் டவரில் ஏறினார். 60 அடி உயரம் உள்ள அந்த செல்போன் டவரின் உச்சிப்பகுதிக்கு சென்ற ஏழுமலை, அங்கிருந்து குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.

பேச்சுவார்த்தை

இதை பார்த்த அந்த பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், கிளியனூர் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார், திண்டிவனம் தீயணைப்பு வீரர்கள், நிலைய அலுவலர் கதிர்வேல் தலைமையிலும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

அவர்கள், ஏழுமலையிடம் பேச்சுவார்த்தை நடத்தி, கீழே இறங்கி வருமாறு கூறினர். மேலும் திண்டிவனம் தாசில்தார் வசந்தகிருஷ்ணன், துணை தாசில்தார் விமல்ராஜ் ஆகியோரும் சம்பவ இடத்துக்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் கீழே இறங்கி வரவில்லை.

காரணம் என்ன?

இதையடுத்து தீயணைப்பு வீரர்கள், செல்போன் டவரில் ஏறி ஏழுமலையை மீட்டு வந்தனர். விசாரணையில், ஏழுமலையின் மனைவி சுசீலா. குடும்ப பிரச்சினை காரணமாக, கணவன் மனைவி இடையே நேற்று காலை தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த ஏழுமலை, செல்போன் டவரில் ஏறி தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் உரிய சிகிச்சை அளித்து வருகிறார்கள். இதுகுறித்து கிளியனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்