தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு விவசாயி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
தர்மபுரி:
தர்மபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற விவசாயியால் பரபரப்பு ஏற்பட்டது.
விவசாயி தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் அருகே உள்ள ராமாபுரத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 55). விவசாயி. இவர் நேற்று தர்மபுரி கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு கொடுக்க வந்திருந்தார். நுழைவு வாயிலில் இருந்த போலீசார் சுப்ரமணி வைத்திருந்த பையை சோதனை செய்ய முயன்றனர். அப்போது திடீரென அவர் பையில் மறைத்து வைத்திருந்த பாட்டிலில் இருந்த மண்எண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்த போலீசார் உடனடியாக அவரிடமிருந்த மண்எண்ணெய் பாட்டிலை பறிமுதல் செய்து, அவர் மீது தண்ணீரை ஊற்றினர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தினர்.
கலெக்டரிடம் மனு
அப்போது அவர், எனக்கு சொந்தமாக ஒரு ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதனை பக்கத்து நிலத்துக்காரர்கள் 2 பேர் அபகரித்து கொண்டனர். நிலத்தை திருப்பி தரகேட்டால் அவர்கள் என்னை தாக்க வருகின்றனர். இதுகுறித்து மொரப்பூர் போலீசில் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மிகுந்த மன வேதனை அடைந்து, தற்கொலை செய்து கொள்ள வந்தேன் என்றார். இதையடுத்து போலீசார் அவரை மனு கொடுப்பதற்காக அழைத்து சென்றனர். அவர் கலெக்டர் சாந்தியிடம் நிலத்தை அபகரித்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி மனு அளித்தார்.