ஓசூர்
மனைவியுடன் விவாகரத்து ஆனதால் மனவேதனை அடைந்த பஞ்சாப் லாரி டிரைவர் ஓசூரில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லாரி டிரைவர்
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் குர்பிரிட்சிங் (வயது 35). லாரி டிரைவர். இவர் ஹெல்மெட் லோடு ஏற்றிக் கொண்டு, ஓசூருக்கு கடந்த 28-ந் தேதி இரவு வந்தார். ஓசூரில் சிப்காட் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தில் லாரியை நிறுத்தி விட்டு அந்த நிறுவன வளாகத்தில் அவர் தூங்க சென்றார். மறுநாள் காலை அந்த நிறுவன ஊழியர்கள் அங்கு சென்று பார்த்த போது குர்பிரிட் சிங் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இது குறித்து ஜூஜூவாடி கிராம நிர்வாக அலுவலர் முனிகிருஷ்ணன் சிப்காட் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விரைந்து வந்து ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். அதில், குர்பிரிட் சிங்கிற்கும், அவரது மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை இருந்ததும், இதன் காரணமாக அவர்கள் விவாகரத்து பெற்றதும் தெரிய வந்தது.
போலீசார் விசாரணை
இதனால் மனவேதனையில் இருந்த குர்பிரிட் சிங் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.