வீராணம் அருகேமதுவில் விஷம் கலந்து குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலைபோலீசார் விசாரணை

Update: 2023-06-17 19:46 GMT

சேலம் 

வீராணம் அருகே மதுவில் விஷம் கலந்து குடித்து எலக்ட்ரீசியன் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எலக்ட்ரீசியன்

சேலம் வீராணம் அருகே உள்ள வெள்ளியம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 27), எலக்ட்ரீசியன். இவருடைய மனைவி ஜோதி. இவர்களுக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகிறது. தற்போது ஜோதி 9 மாத கர்ப்பிணியாக உள்ளார். சதீஷ்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே நேற்று முன்தினம் வலசையூர் பஸ் நிறுத்தம் அருகே குள்ளம்பட்டி பிரிவு ரோட்டில் வாயில் நுரை தள்ளியபடி சதீஷ்குமார் கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே சதீஷ்குமார் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் கிடைத்ததும் வீராணம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். அப்போது சதீஷ்குமார் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும் அவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிறைமாத கர்ப்பிணியான ஜோதிக்கு இன்னும் ஓரிரு நாட்களில் வளைகாப்பு நடத்த உறவினர்கள் ஏற்பாடு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சதீஷ்குமார் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்