என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை

நாமக்கல் அருகே ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியதை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2023-06-08 18:45 GMT

என்ஜினீயரிங் மாணவர்

நாமக்கல் அருகே உள்ள செல்லப்பா காலனி பகுதியை சேர்ந்தவர் குமரன். இவரது மகன் லோகேஷ்வரன் (வயது22). இவர் கரூரில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் இறுதி ஆண்டு தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்து இருந்தார்.

இந்த நிலையில் லோகேஷ்வரன் ஆன்லைன் செயலி மூலம் ரூ.15 ஆயிரம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அதனை கட்ட முடியாமல் தவித்து வந்து உள்ளார். தவணை தேதி முடிந்ததால் கொடுத்த பணத்தை திருப்பி கேட்பதற்காக, ஆன்லைன் நிறுவனத்தினர் லோகேஷ்வரனை செல்போனில் தொடர்பு கொண்டு உள்ளனர். ஆனால் அவர் முறையாக பதில் அளிக்காததால், அவரது பெற்றோரை கடன் கொடுத்தவர்கள் தொடர்பு கொண்டு கேட்டு உள்ளனர்.

தூக்குப்போட்டு தற்கொலை

ஆன்லைனில் கடன் வாங்கியது பெற்றோருக்கு தெரிந்ததால் லோகேஷ்வரனை கண்டித்தனர். இதனால் அவர் மனம் உடைந்து காணப்பட்டார். பின்னர் வீட்டில் யாரும் இல்லாத போது லோகேஷ்வரன் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதனை கண்ட அக்கம்பக்கத்தினர் லோகேஷ்வரனை மீட்டு சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். இங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் லோகேஷ்வரன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இந்த சம்பவம் குறித்து நாமக்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கியதை பெற்றோர் கண்டித்ததால் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நாமக்கல் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்