பாலக்கோடு:
பாலக்கோடு அருகே சர்க்கரை நோயால் கால்கள் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
மூதாட்டி
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மோட்டூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மனைவி கந்தம்மாள் (வயது 60). இவருக்கு கடந்த 10 ஆண்டுகளாக சர்க்கரை நோய் இருந்து வந்தது. இதனால் அவருடைய 2 கால்களும் பாதிக்கப்பட்டன. வலியால் அவதிப்பட்டு வந்த அவர், பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.
மீண்டும் வலி அதிகரித்ததால் மூதாட்டி கந்தம்மாள் மிகுந்த மனவேதனை அடைந்தார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் நேற்று முன்தினம் வீட்டில் விஷம் (எலிபேஸ்ட்) தின்று மயங்கி கிடந்தார்.
தற்கொலை
அவரை மகன் குமரேசன் மற்றும் குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மூதாட்டி கந்தம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சர்க்கரை நோயால் 2 கால்களும் பாதிக்கப்பட்ட மூதாட்டி விஷம் தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.