மனைவி உடல் நலக்குறைவால் அவதி: கட்டிட காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை

Update: 2023-03-14 18:45 GMT

பாப்பாரப்பட்டி:

இண்டூர் அருகே மனைவி உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்ததால் மனமுடைந்த கட்டிட காண்டிராக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கட்டிட காண்டிராக்டர்

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள பண்டஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 55). கட்டிட காண்டிராக்டர். இவருடைய மனைவி ராணி (53). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். ராணி நுரையீரல் பாதிப்பு காரணமாக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் அவருக்கு குணமாகவில்லை.

இந்தநிலையில் நுரையீரல் பாதிப்பால் அவதிப்பட்ட ராணி கடந்த சில நாட்களுக்கு முன்பு தர்மபுரியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தற்கொலை

உடல் நலக்குறைவால் மனைவி அவதிப்பட்டு வருவதால் ராஜா மனமுடைந்தார். இதனால் விரக்தி அடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறி கொக்கியில் வேட்டியால் தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து தகவல் அறிந்த இண்டூர் போலீசார் ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

உடல் நலக்குறைவால் மனைவி அவதிப்பட்டு வந்த நிலையில் கட்டிட காண்டிராக்டர் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்