பாலக்கோடு:
பாலக்கோடு அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
இளம் பெண்
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள மோதுகுலஅள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சின்ன பெருமாள். விவசாயி. இவருக்கும், கோமதி (22) என்பவருக்கும், கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 1 வயதில் ஆண் குழந்தை உள்ளது.
கோமதி, கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல்வேறு ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு குணமாகவில்லை என்று கூறப்படுகிறது. கடந்த 6-ந் தேதி கோமதிக்கு வயிற்று வலி ஏற்பட்டதால் அவர் மனவேதனை அடைந்தார்.
உதவி கலெக்டர் விசாரணை
இதனால் அவர் வீட்டில் இருந்த விஷத்தை குடித்து, மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் பலியானார்.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த பாலக்கோடு போலீசார் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர்கள் தற்கொலை செய்து கொண்ட கோமதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால், தற்கொலை குறித்து தர்மபுரி உதவி கலெக்டர் கீதாராணி விசாரணை நடத்தி வருகிறார்.