ஈரோட்டில் மயக்க ஊசி போட்டு டாக்டர் தற்கொலை

ஈரோட்டில் மயக்க மருந்து ஊசி செலுத்தி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2022-12-30 20:51 GMT


ஈரோட்டில் மயக்க மருந்து ஊசி செலுத்தி டாக்டர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தனியார் ஆஸ்பத்திரி டாக்டர்

பவானி அருகே உள்ள மேவானியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 39). இவர் ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சிறுநீரக சிறப்பு அறுவை சிகிச்சை நிபுணராக பணியாற்றி வந்தார். இவருடைய மனைவி பூர்ணிமா. இவர்களுக்கு இனியன் (10) என்கிற மகன் உள்ளான். பூர்ணிமா எம்.பி.பி.எஸ். பட்டப்படிப்பு முடித்துவிட்டு நோயியல் நிபுணர் மேற்படிப்புக்காக அகமதாபாத்தில் தங்கியிருந்து படித்து வருகிறார்.

டாக்டர் சக்திவேல் ஈரோடு புதிய ஆசிரியர் காலனியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். அவருடன் அவரது தந்தை சண்முகம், தாய் ஜெயலட்சுமி ஆகியோரும் உள்ளனர். இனியனுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டு உள்ளதால், மதுரையில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றிருந்தான். மேலும், சண்முகமும், ஜெயலட்சுமியும் மேவானிக்கு சென்றிருந்தார்கள். இதனால் டாக்டர் சக்திவேல் மட்டும் வீட்டில் இருந்து வந்தார்.

மயக்க மருந்து ஊசி

நேற்று முன்தினம் சக்திவேல் ஆஸ்பத்திரிக்கு சென்று பணியாற்றினார். அப்போது அவர் நோயாளிகளுக்கு வழக்கம்போல் சிகிச்சை அளித்தார். நேற்று காலையில் சக்திவேல் பணிக்கு செல்லவில்லை. இதனால் ஆஸ்பத்திரியின் ஊழியர்கள் டாக்டர் சக்திவேலின் செல்போனுக்கு தொடர்பு கொண்டனர். ஆனால் செல்போன் அழைப்பு ஏற்கப்படவில்லை. எனவே ஆஸ்பத்திரியின் ஊழியர்கள் புதிய ஆசிரியர் காலனியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது கதவு திறந்து கிடந்தது. வீட்டுக்குள் சென்று பார்த்தபோது சக்திவேல் மயங்கிய நிலையில் இருந்தார். அப்போது அவருக்கு அருகில் மயக்க மருந்து ஊசி கிடந்தது. உடனடியாக அவர்கள் சக்திவேலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சக்திவேல் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

கடிதம் சிக்கியது

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகம் மற்றும் போலீசார், டாக்டர் சக்திவேலின் வீட்டுக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அப்போது, டாக்டர் சக்திவேல் மயக்க ஊசி போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.

மேலும் அந்த வீட்டில் சக்திவேல் எழுதி வைத்த ஒரு கடிதத்தை கைப்பற்றியதாகவும், அந்த கடிதத்தில் "என்னுடைய சாவுக்கு நானே காரணம். எனக்கு மனசு சரியில்லாததால் இந்த முடிவை எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது" என்று எழுதி இருந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்