தர்மபுரி அருகே போக்சோ வழக்கில்ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலைஉறவினர்கள் சாலை மறியலால் பரபரப்பு

Update: 2022-12-24 18:45 GMT

தர்மபுரி அருகே போக்சோ வழக்கில் ஜாமீனில் வந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் அவருடைய உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

போக்சோ வழக்கு

தர்மபுரி அருகே உள்ள பழைய தர்மபுரி பகுதியை சேர்ந்தவர் சத்ரியன் (வயது 30). தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு மாணவியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்றதாக புகார் எழுந்தது. இதனால் சத்ரியன் போக்சோவில் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்த அந்த மாணவியிடம் சத்ரியன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரின் பேரில் தர்மபுரி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தூக்கில் பிணம்

இந்த நிலையில் சத்ரியன் நேற்று தர்மபுரி அருகே ஒரு விவசாய நிலத்தில் உள்ள மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக கிடந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தர்மபுரி டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் சத்ரியனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

சத்ரியன் இறந்த இடத்தின் அருகே ஒரு நோட்டு புத்தகம் கிடந்தது. அதில் தனது மரணத்திற்கு காரணம் என 3 பெயர்களை குறிப்பிட்டு சத்ரியன் எழுதி இருந்ததாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இந்த நிலையில் சத்ரியன் இறந்த தகவல் அறிந்த அவருடைய உறவினர்கள் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அங்கு தர்மபுரி- சேலம் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் நவாஸ், சர்மிளா பானு, தர்மபுரி தாசில்தார் ராஜராஜன் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சத்ரியன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் இருப்பதாகவும், இது தொடர்பாக கொலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.

பிரேத பரிசோதனை அடிப்படையில் விசாரணை நடத்தி உண்மையை கண்டறிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் மற்றும் அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து சாலை மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்