தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை

Update: 2022-11-15 18:45 GMT

ஏரியூர்:

ஏரியூர் அருகே தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

பிளஸ்-1 மாணவி

தர்மபுரி மாவட்டம் ஏரியூர் அருகே உள்ள பெரும்பாலை ஆத்துக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி திவ்யா. இந்த தம்பதிக்கு 2 மகள்களும், ஒரு மகனும் இருந்தனர். இதில் மூத்த மகளான மோனிகா ஸ்ரீ (வயது 16), சேலம் மாவட்டம் மேச்சேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

இவர் சரியாக படிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் நன்றாக படிக்கும் படி பெற்றோர் அவருக்கு அறிவுரை வழங்கி வந்தனர். இந்தநிலையில் பள்ளியில் சமீபத்தில் நடந்த தேர்வில் மோனிகா ஸ்ரீ மதிப்பெண் குறைவாக பெற்றார். இதனால் பெற்றோர் அவரை கண்டித்தனர். இதில் மோனிகா ஸ்ரீ மனவேதனை அடைந்தார்.

ஆற்றில் குதித்து தற்கொலை

இந்தநிலையில் நேற்று முன்தினம் மாணவி மோனிகா ஸ்ரீ பெரும்பாலை அருகே உள்ள மேட்டூர் அணையின் நீர்த்தேக்க பகுதியான தொப்பையாற்றுக்கு சென்றார். அங்கு திடீரென அவர் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த பெரும்பாலை போலீசார் அங்கு விரைந்து சென்றனர்.

பின்னர் அவர்கள் ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட மாணவி மோனிகா ஸ்ரீயின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த தற்கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தேர்வில் மதிப்பெண் குறைந்ததை பெற்றோர் கண்டித்ததால் பிளஸ்-1 மாணவி ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்