ஓசூர்:
காதலி இறந்ததால் வேதனை அடைந்த தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தனியார் நிறுவன ஊழியர்
ஆந்திர மாநிலம் குப்பம் மாவட்டம் சாந்திபுரம் தாலுகா நடுப்பள்ளி அருகே உள்ள அகலதொட்டியை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மகன் விக்னேஷ் (வயது 18). இவர் ஓசூரை அடுத்த பாகலூர் அருகே சேவகானப்பள்ளியில் தங்கி அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
இவரும், அவரது சொந்த ஊரைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரும் காதலித்து வந்தனர். இந்தநிலையில் கடந்த 1-ந் தேதி அந்த பெண் இறந்து விட்டார். தனது காதலி இறந்த சோகத்தில் இருந்த விக்னேஷ், பாகலூர் அருகே தான் தங்கி இருந்த அறையில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை
இது குறித்து தகவல் அறிந்ததும் பாகலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கனிமொழி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று, விசாரணை நடத்தினர். பின்னர் விக்னேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விக்னேசின் தந்தை வெங்கடேஷ் கொடுத்த புகாரின் பேரில் பாகலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
காதலில் இறந்த வேதனையில் தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.