அந்தியூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை; மனைவி பிரிந்து சென்றதால் விபரீத முடிவு

அந்தியூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-23 17:02 GMT

அந்தியூர்

அந்தியூர் அருகே மனைவி பிரிந்து சென்றதால் விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கள்ளத்தொடர்பு

அந்தியூர் அருகே உள்ள வாகை மரத்து கொடிக்கால் ராமகவுண்டன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 37). கூலி தொழிலாளி. தாசநாய்க்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் சித்ரா (35). இவருக்கும், மகேந்திரனுக்கும் கடந்த 17 ஆண்டு்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.

கடலூர் பகுதியைச் சேர்ந்தவர் ஆறுச்சாமி (50). இந்த நிலையில் மகேந்திரன், சித்ரா, ஆறுச்சாமி ஆகிய 3 பேரும் ஒரே செங்கல் சூளையில் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது சித்ராவுக்கும், ஆறுச்சாமிக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. மேலும் 2 பேரும் செல்போனிலும் பேசி வந்துள்ளனர். இதனை மகேந்திரன் கண்டித்தார். இதுகுறித்து வெள்ளித்திருப்பூர் போலீஸ் நிலையத்திலும் புகார் அளித்தார்.

தற்கொலை

அதைத்தொடர்ந்து ஆறுச்சாமியையும், சித்ராவையும் போலீசார் அழைத்து கண்டித்துள்ளனர். எனினும் தொடர்ந்து 2 பேரும் பழகி வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது மகனுடன் சித்ரா கணவரை பிரிந்து ஆறுச்சாமியுடன் சென்றுவிட்டார். இதனால் மனமுடைந்து காணப்பட்ட மகேந்திரன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் அந்தியூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, மகேந்திரனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்