மளிகை கடைக்காரர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை

சூளகிரியில் கடன் தொல்லையால் மளிகை கடைக்காரர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-10-10 18:45 GMT

சூளகிரி:

சூளகிரியில் கடன் தொல்லையால் மளிகை கடைக்காரர், மனைவியுடன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மளிகை கடைக்காரர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூளகிரியில் உள்ள வி.ஐ.பி. நகரை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 49). இவரது மனைவி கிருஷ்ணவேணி (45). சிவகுமார், சூளகிரியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில் மளிகை கடை வைத்து நடத்தி வந்தார்.

இந்த தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் ராஜதர்சினி (13). இவர் சூளகிரியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7-ம் வகுப்பும், இளைய மகள் சிவானி (10) குந்தாரப்பள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பும் படித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் காலாண்டு விடுமுறைக்காக கிருஷ்ணவேணியின் பெற்றோர் ஊரான கோவைக்கு சென்று உள்ளனர்.

தூக்கில் பிணம்

இதனிடையே சிவகுமார் ரியல் எஸ்டேட் உள்ளிட்ட பல தொழில்களில் முதலீடு செய்து வந்ததாக தெரிகிறது. மேலும் ரூ.2 கோடி அளவிலான தொகை ஏமாற்றப்பட்டதாகவும், இதனால் கடன் கொடுத்தவர்கள் அவருக்கு நெருக்கடி கொடுத்தும், மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது. கடன் தொல்லை காரணமாக கடந்த சில ஆண்டு களாக கணவன், மனைவி 2 பேரும் மனஉளைச்சலுக்கு ஆளாகி சோகத்துடன் காணப்பட்டனர்.

இந்த நிலையில் மளிகை கடை ஊழியர்கள், கடையின் சாவி வாங்குவதற்காக நேற்று காலை சிவகுமார் வீட்டுக்கு சென்றனர். அப்போது, கணவன், மனைவி 2 பேரும் தனித்தனி அறையில் தூக்கில் பிணமாக தொங்கினர். இதைக்கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் சூளகிரி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கணவன்-மனைவி 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சிவகுமார் அறையில் இருந்து கடிதம் ஒன்றையும் போலீசார் கைப்பற்றினர். அதில், கடன் தொல்லையால் தாங்கள் தற்கொலை செய்ய முடிவெடுத்ததாக குறிப்பிட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கடன் தொல்லையால் கணவன்-மனைவி 2 பேரும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணமா? என தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மளிகை கடைக்காரர், மனைவியுடன் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்