துணியை சேர்த்து கட்டிக்கொண்டு அக்னிதீர்த்த கடலில் தம்பதி தற்கொலை
இடுப்பில் துணியை சேர்த்து கட்டிக்கொண்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி தம்பதி தற்கொலை செய்து கொண்டது. அவர்களின் வீட்டில் உருக்கமான கடிதம் சிக்கியது.
ராமேசுவரம்,
இடுப்பில் துணியை சேர்த்து கட்டிக்கொண்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் மூழ்கி தம்பதி தற்கொலை செய்து கொண்டது. அவர்களின் வீட்டில் உருக்கமான கடிதம் சிக்கியது.
ஓய்வு பெற்ற அரசு ஊழியர்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே சமத்தூர் எஸ்.பொன்னாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 62). இவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ஊரக வளர்ச்சித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றார். இவருடைய மனைவி தனலட்சுமி (59). இவர் சர்வோதயா சங்கத்தில் மேலாளராக பணியாற்றி வந்தார். இவர்களின் ஒரே மகன் கனீஸ் பிரபாகரன் (22). ஐ.டி. நிறுவன ஊழியர். இவர் தனது பெற்றோர் மீது அதிக பாசம் கொண்டிருந்தார்.
கடந்த ஆண்டு தந்தை கோவிந்தராஜுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் பிரபாகரன் மனவேதனையடைந்தார். இதனால் அவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் 9-ந் தேதி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
மகன் இறந்த சோகம்
ஆசை ஆசையாக வளர்த்து நன்றாக படிக்க வைத்து அழகு பார்த்து வந்த ஒரே மகனை இழந்ததால் கோவிந்தராஜ், தனலட்சுமி ஆகியோர் மிகுந்த மனவேதனையடைந்து எப்போதும் மகனை நினைத்துக்கொண்டே இருந்து வந்தனர். மேலும் அவர்கள் இனி எங்களால் மகன் இன்றி வாழ முடியாது என்றும், இனி இருக்கமாட்டோம், எங்காவது சென்று இறந்துவிடுவோம் என்றும் உறவினர்களிடம் அடிக்கடி கூறிவந்தனர்.
அவர்களை உறவினர்கள் தேற்றி ஆறுதல் கூறி வந்தனர். இருந்தபோதிலும் அவர்களால் மகனின் இழப்பை தாங்க முடியாமல், மனவேதனையில் இருந்து மீண்டு வரமுடியாமல் தவித்து வந்தனர். மகன் இறந்த சோகம் அவர்களை துரத்தியது.
வீட்டைவிட்டு வெளியேறினர்
இந்தநிலையில் அவர்கள் இருவரும் கடந்த 3-ந் தேதி இரவு வீட்டைவிட்டு வெளியே சென்றனர். அதன்பிறகு அவர்கள் வீடு திரும்பவில்லை. சம்பவத்தன்று இரவு, அவர்களின் உறவினர் ஒருவர் கோவிந்தராஜின் வீட்டிற்கு சென்றார். அப்போது வீடு பூட்டி கிடந்தது. இதையடுத்து அவர், கோவிந்தராஜ் மற்றும் தனலட்சுமியின் செல்போன் எண்களை தொடர்பு கொண்டார். ஆனால் செல்போன் எண்கள் சுவிட்ச்-ஆப் என்று வந்தது.
பின்னர் அவர்களை உறவினர்கள் பல இடங்களில் தேடிப் பார்த்தனர். 2 நாட்கள் ஆகியும் அவர்களை பற்றிய விவரங்கள் கிடைக்காததால் நேற்று முன்தினம் பொள்ளாச்சி அருகே கோட்டூர் போலீஸ் நிலையத்தில் உறவினர் ஒருவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
கடலில் மிதந்த உடல்கள்
இதற்கிடையே ராமேசுவரம் அக்னிதீர்த்த கடல் பகுதியில் நேற்று அதிகாலையில் பக்தர்கள் நீராடிக்கொண்டு இருந்தனர். அப்போது, ஒரு ஆண் மற்றும் பெண்ணின் உடல்கள் ஒன்றாக மிதந்தது. இருவரும் ஒரே துணியால் தங்களது இடுப்பில் கட்டிய நிலையில் கடலில் பிணமாக மிதந்தனர். இதைப்பார்த்து அங்கு நீராடிய பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதை அறிந்த ராமேசுவரம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கனகராஜ் தலைமையில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள், கடலில் மிதந்த 2 பேரின் உடல்களை மீட்க முயன்ற போது, இருவரது உடல்களும் துணியால் சேர்த்து கட்டப்பட்டு இருந்தது. பின்னர் அவர்கள், 2 உடல்களையும் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்களை யார்? என்பதை அறிய போலீசார் விசாரணையை தொடங்கினர். அப்போது, பிணமாக கிடந்த முதியவரின் சட்டை பையில், கோவிந்தராஜ் என்று குறிப்பிடப்பட்டு, ஆதார் அட்டை நகல் இருந்தது.
அதை கைப்பற்றிய கடலோர போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ், ஆதார் நகலில் இருந்த முகவரியை வைத்து கோவை போலீசாரை தொடர்பு கொண்டு விவரத்தை தெரிவித்தார்.
அதன்பிறகுதான் ராமேசுவரம் கடலில் பிணமாக மிதந்தது பொள்ளாச்சி பகுதியில் காணாமல்போன கோவிந்தராஜ், தனலட்சுமி என்பதும், மகனை இழந்த துக்கம் தாளாமல் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்தது.இதுபற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.அக்னி தீர்த்த கடலில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
உருக்கமான கடிதம் சிக்கியது
இதற்கிடையே தற்கொலை முடிவை எடுக்கும் முன்பு கோவிந்த ராஜ் எழுதிய கடிதம் ஒன்று வீட்டில் இருந்தது தெரியவந்தது. அதை கோட்டூர் போலீசார் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளதாவது:-
எங்களது ஒரே மகன் இறந்ததால் வாழ பிடிக்கவில்லை. எங்களின் சொத்துகளை தனிப்பட்ட முறையில் யாருக்கும் கொடுக்கவில்லை. எனவே நாலு பேருக்கு நல்லது செய்வதற்காக மகன் கனீஸ் பிரபாகரன் என்ற பெயரில் அறக்கட்டளை தொடங்கி உள்ளோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். மேலும் அந்த அறக்கட்டளையில் கோவையை சேர்ந்த 4 பேரை (பெயர் குறிப்பிட்டு) நியமித்து உள்ளதாகவும் கடிதத்தில் குறிப்பிட்டு உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.