பென்னாகரம்:
பென்னாகரம் அருகே மனைவி பிரிந்து சென்றதால் வேதனை அடைந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
வாலிபர்
தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள ஏறுப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரஜினி. இவருடைய மகன் ரமேஷ் (வயது 30). பெங்களூருவில் பழைய பேப்பர் கடை நடத்தி வந்தார். இவருக்கு சித்ரா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. இதனால் கணவரிடம் கோபித்து கொண்டு சித்ரா மல்லாபுரத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
தற்கொலை
மனைவி பிரிந்து சென்றதால் ரமேஷ் மன வேதனை அடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று காலை 11 மணி அளவில் வீட்டில் யாரும் இல்லாதபோது மின்விசிறியில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதை அறிந்த உறவினர்கள் பென்னாகரம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ரமேசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.