அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடு ஏற்றும் விழா

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று நடைபெற்றதால் வருகிற 21-ந் தேதி அரவை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-04-10 17:52 GMT

அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று நடைபெற்றதால் வருகிற 21-ந் தேதி அரவை தொடங்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

23 முறை பழுது

மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயல்பட்டு வருகிறது. சுமார் 63 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட பழமையான இந்த ஆலை பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் இயக்கப்பட்டு வருகிறது. உடுமலை, மடத்துக்குளம், பல்லடம், தாராபுரம், பழனி, நெய்க்காரப்பட்டி, ஓட்டன்சத்திரம், குமரலிங்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் விவசாயிகள் இந்த ஆலையின் அங்கத்தினர்களாக உள்ளனர்.

கரும்பு சாகுபடி பரப்பு தொடர்ந்து குறைந்து வருவது, உரிய நேரத்தில் கரும்பு வெட்டாதது, வெளிச்சந்தையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அரவைக்கு தேவையான கரும்பு கிடைக்காத நிலையே உள்ளது. கடந்த அரவைப்பருவத்தில் 86 நாட்கள் ஆலை இயங்கிய நிலையில் 23 முறை பழுது ஏற்பட்டு இயக்கம் தடைபட்டுள்ளது. இதனால் நடப்பு ஆண்டில் கரும்பு பதிவு செய்வதில் விவசாயிகளிடையே தயக்கம் ஏற்பட்டுள்ளது.

அமராவதி சர்க்கரை ஆலையை தொடர்ந்து இயங்கும் வகையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில் சிறப்பான முறையில் பணிகள் நடைபெற்றுள்ளதால் நடப்பு ஆண்டில் பழுதில்லாமல் முழுமையாக இயங்கும் என்று அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.

சோதனை ஓட்டம்

இதனையடுத்து வருகிற 21-ந் தேதி அரவை தொடங்க திட்டமிட்டு இளஞ்சூடு ஏற்றும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் அமராவதி சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் சண்முகநாதன், கரும்பு பயிரிடுவோர் சங்கத் தலைவர் சண்முகவேல், செயலாளர் ஈஸ்வரன், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் பாலதண்டபாணி, வீரப்பன், தலைமைப் பொறியாளர் பார்த்திபன், கரும்பு பெருக்கு அலுவலர் கதிரவன், தலைமை ரசாயன அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அப்போது அமராவதி சர்க்கரை ஆலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பணிகள், மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகள் கேட்டு தெரிந்துகொண்டனர்.

ஆலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் மற்றும் கடந்த ஆண்டில் ஏற்பட்ட பாதிப்புகளைக் களைவதற்கான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருகிற 17-ந் தேதிக்குள் பராமரிப்புப் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்துவது எனவும், 21-ந் தேதி அரவை தொடங்குவது எனவும் திட்டமிடப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்