அமராவதி சர்க்கரை ஆலை ஏப்ரல் மாதம் அரவை தொடங்குவதற்கு தயார்
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏப்ரல் மாதம் அரவை தொடங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் ஆலையை மேம்படுத்த அரசிடம் ரூ.50 கோடி நிதி கோரப்பட்டுள்ளது என்று மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் விவசாயிகளிடம் கூறினார்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை ஏப்ரல் மாதம் அரவை தொடங்குவதற்கு தயாராக உள்ளது. மேலும் ஆலையை மேம்படுத்த அரசிடம் ரூ.50 கோடி நிதி கோரப்பட்டுள்ளது என்று மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் விவசாயிகளிடம் கூறினார்.
அமராவதி சர்க்கரை ஆலை
திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் வினீத் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையை முழு வீச்சில் செயல்படுத்தி கரும்பு விவசாயிகளிடம் இருந்து முழுமையாக கரும்பை காலதாமதமின்றி கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
கூட்டத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் பால்பிரின்ஸ்லி ராஜ்குமார் கூறியதாவது:-
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் மேம்பாட்டு பணிகள் நடக்கிறது. கர்நாடகாவில் இருந்து தொழில்நுட்ப குழுவினர் வந்து ஆய்வு செய்துள்ளனர். இந்த பணிகளை வருகிற ஏப்ரல் மாதம் 1-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளோம். அதன்பிறகு எந்த நேரத்திலும் அரவை பணி தொடங்குவதற்கு தயாராக இருக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு வெட்டுவதற்கு ஆட்கள் போதுமான அளவு நமக்கு கிடைக்க வேண்டும். திருப்பூர் மாவட்டத்துக்கு அருகே அமைந்துள்ள சர்க்கரை ஆலைகள் ஓடி வருகிறது. ஒவ்வொரு ஆலையும் ஓடி முடியும் போது அங்கிருந்து கரும்பு வெட்டும் ஆட்களை நாம் இங்கு அழைத்து வர வேண்டியுள்ளது.
கரும்பு வெட்டும் ஆட்கள்
ஆகஸ்டு மாதம் வரை விவசாயிகள், நமது ஆலைக்கு கரும்பு கொடுப்பார்கள். அதுவரை ஆலை முழுவீச்சில் ஓடும் அளவுக்கு கரும்பு வெட்டும் ஆட்கள் கிடைக்க வேண்டும். இதற்காக விவசாயிகள், அலுவலர்கள் கரும்பு வெட்டும் ஆட்களை தேடி சென்றுள்ளனர். சேலம் மோகனூர் சர்க்கரை ஆலையில் விரைவில் அரவை முடிவடைய உள்ளது. அங்கிருந்து கரும்பு வெட்டும் ஆட்களை அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கரும்பில் பூ பூப்பதால் பிரச்சினை ஏதும் இல்லை. அதனால் மகசூல் குறையும் என்று விவசாயிகள் கவலையடைய வேண்டாம். அமராவதி சர்க்கரை ஆலையை புனரமைத்து கரும்பு விவசாயிகளுக்கு பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். கரும்பு விவசாயிகள் சிலர், மக்காச்சோளம் பயிரிட மாறி செல்வதாக தெரிய வருகிறது. திருப்பூர் மாவட்டத்தில் இந்த பகுதி கரும்பு விவசாயிகளுக்கு நிலைத்தன்மை உள்ளதாக அமைந்துள்ளது. கரும்பு டன்னுக்கு ரூ.3 ஆயிரம் தமிழக அரசு சார்பில் கிடைக்கிறது. மத்திய அரசிடம் கூடுதல் தொகையை பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.
புனரமைக்க ரூ.50 கோடி நிதி
10 மாதம் மகசூல் கிடைக்கும் வகையில் புதிய கரும்பு பயிர்களும் வந்துள்ளது. புதிதாக மேலும் 2 ரகங்கள் வந்துள்ளன. ஏக்கருக்கு சராசரியாக 35 டன் கரும்பு இங்கு எடுக்கிறார்கள். ஆனால் 70 டன் எடுக்கும் விவசாயிகளும் உள்ளனர். கரும்பு விவசாயத்தில் கூடுதல் மகசூல் கிடைக்கும். அதனால் அமராவதி சர்க்கரை ஆலையை மாற்றியமைக்கவும், புனரமைக்கவும் ரூ.40 கோடி முதல் ரூ.50 கோடி வரை அரசிடம் கேட்டுள்ளோம். கருத்துரு அனுப்பி திட்ட வரைவுகள் தயாரிக்கும் பணி நடக்கிறது. வரும் பட்ஜெட்டில் கூட அறிவிப்பு வெளியாகும் வாய்ப்புள்ளது.
சர்க்கரை ஆலையின் அரவைக்கு அந்தளவுக்கு கரும்பு வரத்து இல்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் அரசிடம் கோரிக்கை வைத்து நிதி பெற வலியுறுத்தி வருகிறோம். விவசாயிகள் கருத்தில் கொண்டு கரும்பு விவசாயத்தில் கவனம் செலுத்த வேண்டும். அமராவதி சர்க்கரை ஆலை பகுதி கரும்பு விவசாயிகளிடம் இருந்து வெளியூர் அரவை ஆலைகளுக்கு கரும்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறார்கள். அந்த நிலை மாற வேண்டும். அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை முழுவீச்சில் செயல்படவே நாம் முயற்சி மேற்கொள்கிறோம். இந்த பகுதி விவசாயிகள் கரும்பை அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கொடுக்கும் வகையில் கண்காணிப்புக்குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் முன்வந்து அமராவதி சர்க்கரை ஆலையை காக்க வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.