அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் 2,300 ஏக்கர் கரும்பு பதிவு
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு நிதியாண்டில் அரவைக்காக 2,300 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பு நிதியாண்டில் அரவைக்காக 2,300 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரி தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பங்கள்
மடத்துக்குளத்தை அடுத்த கிருஷ்ணாபுரத்தில் செயல்பட்டு வரும் தமிழ்நாட்டின் முதல் கூட்டுறவு சர்க்கரை ஆலையான அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு சென்று அங்குள்ள சர்க்கரை தயாரிப்பு தொழில் நுட்பங்கள் மற்றும் விவசாயிகளிடமிருந்து கரும்பு கொள்முதல் செய்தல் பற்றி வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் தெரிந்து கொண்டனர். ஆலையின் மேலாண்மை இயக்குனர் பால் பிரின்சஸிலி ராஜ்குமார் ஆலையின் சிறப்புகள் குறித்து மாணவர்களுக்கு எடுத்துக் கூறினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
'அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1961-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஒரு நாளைக்கு 1,200 டன் முதல் 1,500 டன் வரை கரும்பைப் பிழியும் திறன் கொண்டது. இங்கு தயாரிக்கப்படும் சர்க்கரை அரசாங்கத்தால் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
மானியத்திட்டங்கள்
இந்த ஆலையில் நடப்பு நிதி ஆண்டில் அரவைக்காக திருப்பூர், திண்டுக்கல், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 800 விவசாயிகளிடம் இருந்து 2,300 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தினசரி 1000 டன் வரை கரும்பு அரவை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ஆலைக்கழிவிலிருந்து பெறப்படும் எரிசாராயத்திலிருந்து வேதியியல் எத்தனால் தயாரிக்கப்படுகிறது.
இது தவிர கரும்பு சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு உயர் விளைச்சல் தொழில் நுட்பங்களை வழங்குதல், 75 சதவீதம் மற்றும் 100 சதவீதம் மானியத்தில் சொட்டுநீர்ப் பாசனம் அமைத்தல், அகலப்பார் நடவுக்கு மானியத் திட்டம் போன்றவையும் அமராவதி சர்க்கரை ஆலை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
விவசாயிகளுக்கு மானியம்
கரும்பு இனப்பெருக்க விஞ்ஞானிகளைக்கொண்டு விவசாயிகளுக்கு அவ்வப்போது பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. தேசிய வேளாண் வளர்ச்சித்திட்டத்தின் கீழ் பரு சீவல் நாற்றங்கால் அமைக்கும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.5 ஆயிரம் மானியமும், ஒரு பரு கருணை நடவு செய்யும் விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 1500 மானியமாகவும் வழங்கப்பட்டு வருகிறது.
இவை தவிர வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் விசைத்தெளிப்பான், களை எடுக்கும் கருவி மற்றும் பவர் டில்லர் போன்ற கருவிகளும் எஸ்.சி மற்றும் எஸ்.டி விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்திலும் மற்ற விவசாயிகளுக்கு 40சதவீத மானியத்திலும் வழங்கப்படுகிறது' என்று அமராவதி சர்க்கரை ஆலையின் மேலாண்மை இயக்குனர் தெரிவித்துள்ளார்.