அமராவதி சர்க்கரை ஆலை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2022-07-22 18:46 GMT

மடத்துக்குளம் அமராவதி சர்க்கரை ஆலை சீராக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒப்பந்த முறை

உடுமலை மடத்துக்குளம் வட்டாரங்களில் திருமூர்த்தி மற்றும் அமராவதி அணைகளை நீராதாரமாகக் கொண்டு பணப்பயிரான கரும்பு சாகுபடி செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதில் வெல்ல உற்பத்திக்காக தனியாரிடம் கரும்பு விற்பனை செய்பவர்கள் தவிர்த்து ஏராளமான விவசாயிகள் மடத்துக்குளம் கிருஷ்ணாபுரத்தில் உள்ள அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த முறையில் கரும்பு வழங்கி வருகின்றனர்.

உடுமலை, மடத்துக்குளம் தாலுகாக்கள் மட்டுமல்லாமல் பழனி, ஒட்டன்சத்திரம், தாராபுரம், பல்லடம் தாலுகாக்களில் ஆலை உறுப்பினர்களாக உள்ள கரும்பு விவசாயிகளும் அமராவதி சர்க்கரை ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வருகின்றனர். இதற்கென 5 இடங்களில் கரும்பு கோட்ட அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சமீப காலங்களாக வெட்டு ஆட்கள் பற்றாக்குறை, எந்திரம் பராமரிப்பு, பழுது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் சர்க்கரை ஆலை மூலம் சரியான பருவத்தில் கரும்பு கொள்முதல் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து உடுமலை ஆர்.டி.ஓ. ஜஸ்வந்த் கண்ணனிடம் விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.

வாழ்வாதாரம்

தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நிர்வாகி பாலதண்டபாணி கூறியதாவது:-

800 டன் பிழிதிறன் கொண்ட அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை 1958-ல் தொடங்கப்பட்டு 1960-ல் அரவையை தொடங்கியது. இடையில் அது நவீனமயமாக்கப்பட்ட நிலையிலும் வறட்சி, போதிய கரும்பு இல்லாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் முழுமையாக சர்க்கரை உற்பத்தி நடைபெறவில்லை. இந்த ஆலைக்கு நடப்பு ஆண்டில் 4000 ஏக்கர் கரும்பு ஒப்பந்தம் செய்யப்பட்டு ஏப்ரல் மாதம் அரவை தொடங்கியது. ஆனால் 102 நாட்களில் பல்வேறு காரணங்களால் 32 நாட்கள் அரவை நடைபெறவில்லை. ஆலை பழுது என்ற வகையில் பல மணி நேரங்கள், சுத்தப்படுத்தும் பணிகளுக்காக பல மணி நேரங்கள் என ஆலை 32 நாட்கள் அளவுக்கு இயக்கப்படவில்லை.

இதனால் ஆலைக்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட கரும்பு உரிய பருவத்தில் வெட்டப்படாமல் பல ஆயிரம் டன் கரும்பு வீணாகிவருகிறது. இதனால் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது. இந்த சம்பவத்தால் வேதனையடைந்துள்ள விவசாயிகள் வரும் ஆண்டுக்காக இதுவரை ஒரு ஏக்கர் கரும்பு கூடஅமராவதி சர்க்கரை ஆலைக்காக ஒப்பந்தம் செய்யவில்லை. இந்த நிலை நீடித்தால் அடுத்த ஆண்டு ஆலையை இயக்குவதே கேள்விக்குறியாகி விடும். எனவே நிலுவை கரும்புகளை வெட்டுவதற்கு உத்திரவாதம் வழங்க வேண்டும். கரும்புக்கான பணத்தை விவசாயிகளுக்கு உடனடியாக பட்டுவாடா செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து மாவட்ட நிர்வாகத்துக்கு பரிந்துரை செய்து சர்க்கரை ஆலை சீராக செயல்படவும் கரும்பு விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும.'

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்