காதில் பூ சுற்றி கரும்பு விவசாயிகள் நூதன போராட்டம்
காதில் பூ சுற்றி கரும்பு விவசாயிகள் நூதன போராட்டம்
தஞ்சை மாவட்டம் கபிஸ்தலம் அருகே திருமண்டங்குடி கிராமத்தில் திருஆரூரான் சர்க்கரை ஆலை இயங்கி வந்தது. இந்த ஆலைக்கு ஏராளமான விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பை அரவைக்கு அனுப்பி வைத்தனர். அவ்வாறு அனுப்பிய கரும்புக்கான தொகையை ஆலை நிர்வாகம் முறைப்படி வழங்கவில்லை என ஏராளமான விவசாயிகள் கவலை தெரிவித்து வருகிறார்கள். ரூ.100 கோடி வரை கரும்புக்கான தொகை நிலுவை வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சர்க்கரை ஆலை மூடப்பட்டது. இந்த ஆலையை வேறு ஒரு நிறுவனம் விலைக்கு வாங்கி, சீரமைப்பு பணிகளை தொடங்கிய போது அதனை கரும்பு விவசாயிகள் தடுத்து நிறுத்தியதுடன் தங்களுக்கு தர வேண்டிய நிலுவை தொகையை தர வேண்டும் என வலியுறுத்தினர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் சர்க்கரை ஆலை முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று 12-வது நாளாக போராட்டம் நடந்தது. அப்போது விவசாயிகள் காதில் பூ சுத்திக்கொண்டு நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் தங்க காசிநாதன், மாவட்ட செயலாளர் நாக முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.