பொங்கல் பண்டிகை தேவைக்காக நன்கு வளர்ந்து காணப்படும் செங்கரும்பு

பொங்கல் பண்டிகை தேவைக்காக நன்கு வளர்ந்துள்ள செங்கரும்பில் தோகை உரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

Update: 2022-11-27 19:22 GMT

பொங்கல் பண்டிகை தேவைக்காக நன்கு வளர்ந்துள்ள செங்கரும்பில் தோகை உரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.

பொங்கல் கரும்பு சாகுபடி

தஞ்சை மாவட்டத்தில் நெல், வாழை, மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு அடுத்தபடியாக கரும்புகளும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் சர்க்கரை ஆலைகளுக்கு அனுப்புவதற்கான சாகுபடி செய்யப்படும் கரும்புகளை தவிர்த்து பொங்கல் பண்டிகைக்கான கரும்புகளும் சாகுபடி செய்யப்படும். இந்த வகை கரும்புகள் 700 ஏக்கர் வரை சாகுபடி செய்யப்படும்.

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கரும்பு விளைவிக்கப்பட்டாலும், டெல்டா மாவட்டங்களில் விளைவிக்கப்படும் கரும்புகளுக்கு தனி மவுசு உண்டு. காவிரி நீர், பாரம்பரியமான விவசாயம் உள்ளிட்ட காரணங்களில் தமிழ்நாடு முடுழுவதும், டெல்டா கரும்புகளுக்கு கிராக்கி உள்ளது. இந்த கரும்புகள் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் நடவு செய்யப்பட்டு மார்கழி மாதம் 20-ந்தேதிக்கு பிறகு அறுவடை தொடங்கும். கடந்த ஆண்டு பொங்கல் கரும்புகள் மழையால் சாய்ந்து விவசாயிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

தோகை உரிக்கும் பணி

அதன்படி இந்த ஆண்டும் பொங்கல் கரும்புகள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழை காரணமாக ஒரு சில இடங்களில் பொங்கல் கரும்புகள் சாய்ந்தன. இதையடுத்து சாய்ந்த கரும்புகளை விவசரியகள் நிமிர்த்தி வைத்து 2 அல்லது 3 கரும்புகளை சேர்த்து கட்டினர். இந்த நிலையில் மீண்டும் மழையால் சாயாமல் இருப்பதற்காக தோகை உரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேலும் அடுத்த மாதம் இறுதியில் கரும்புகள் அறுவடை செய்யப்படும் என்பதால் இந்த பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பலத்த மழை பெய்யும் போது தோகைகள் அதிகமாக கரும்புகளில் இருந்தால் எளிதில் சாய்ந்து விடும். ஆனால் அதனை அகற்றி விட்டால் சாயாது என்பதால் அகற்றப்பட்டு வருகிறது. தஞ்சையை அடுத்த சூரக்கோட்டை பகுதிகளில் கரும்புகளில் தோகை உரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

மழையால் பாதிப்பு

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், "கடந்த ஆண்டு வடகிழக்கு பருமழையின் போது பொங்கல் கரும்புகள் பெருமளவில் சாய்ந்தன. இதனால் கரும்பு விளைச்சல் பாதிக்கப்பட்டது. மேலும் 3 அல்லது 4 கரும்புகளை ஒன்றாக கட்டி வைத்தோம். இந்த ஆண்டு மழையில் சாயாமல் இருக்க தற்போது தோகை உரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

நாங்கள் சித்திரை மாதம் கரும்புகளை நடவு செய்த பின்னர் ஆடி மாதத்தில் முதல் தடவையாக தோகை உரிப்போம். அதன் பின்னர் பட்டம் கட்டி (கரும்புகளுக்கு மண் அணைப்பது) பராமரிப்போம். பின்னர் 2 மாதம் கழித்து மீண்டும் தோகை உரித்து பட்டம் கட்டுவோம். இறுதியாக மார்கழி மாதம் 15-ந்தேதிக்கு பிறகு இறுதிக்கட்டமாக தோகை உரிப்போம்."என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்