கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகை
கரும்பு நிலுவை தொகையை வழங்க கோரி கலெக்டர் அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டனா்.
தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கலையநல்லூர் தரணி சர்க்கரை ஆலையை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும். தரணி சர்க்கரை விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்பு நிலுவை தொகையை அரசே வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தை கையில் கரும்புடன் தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தினர் முற்றுகையிட்டனர்.
இதற்கு தரணி சர்க்கரை ஆலை சங்க தலைவர் சாந்தமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ரகுராமன், பொருளாளர் சிங்காரவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தில் மாநில தலைவர் வேல்மாறன், மாநில பொதுச் செயலாளர் ரவீந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்க வேண்டிய ரூ. 26 கோடியை அரசு வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பின்னர் அவர்கள், கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்துவிட்டு அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர்.
போராட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் ஏழுமலை, மாவட்ட செயலாளர் ஸ்டாலின் மணி உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.