அறுவடை செய்ய முடியாமல் பூப்பூத்து வீணாகும் கரும்புகள்

வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் பூப்பூத்தும் கரும்புகளை அறுவடை முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.

Update: 2022-12-03 16:56 GMT


வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் பகுதிகளில் பூப்பூத்தும் கரும்புகளை அறுவடை முடியாமல் விவசாயிகள் வேதனையடைந்து உள்ளனர்.

கரும்பு பயிர்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம், தச்சம்பட்டு, வெறையூர் உள்ளிட்ட கிராமங்களை மையமாக கொண்டு 100-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் முக்கிய வேளாண் விளை பயிராக கரும்பு, நெல், மக்காச்சோளம், கேழ்வரகு, மணிலா, உளுந்து உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

பருவ கால பயிராக மலர்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்யப்படுகின்றன. நவம்பட்டு, சின்னகல்லப்பாடி, நரியாப்பட்டு, பெரியகல்லப்பாடி, கல்லேரி, வாணாபுரம், மழுவம்பட்டு, சதாகுப்பம், அகரம்பள்ளிப்பட்டு, விருதுவிளங்கினான், தலையாம்பள்ளம், அள்ளிக்கொண்டாப்பட்டு, பறையம்பட்டு, பாவப்பட்டு, பழையனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஹெக்டேரில் ஆண்டு பயிராக கரும்பு சாகுபடி செய்கிறார்கள்.

பெரும்பாலான பகுதிகளில் போதுமான அளவு தண்ணீர் இருப்பதால் விவசாயிகள் அதிகளவில் நெல் சாகுபடி செய்கிறார்கள். கரும்புக்கு அதிகளவில் சொட்டுநீர் பாசன முறை பயன்படுத்தப்பட்டு வருவதால், பெரும்பாலான விவசாயிகள் சொட்டுநீர் பாசன முறையை பயன்படுத்தி கரும்பு சாகுபடி செய்கிறார்கள். இப்பகுதி விவசாயிகள் சாகுபடி செய்யும் கரும்பை அறுவடை செய்து கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கும், தனியார் சர்க்கரை ஆலைக்கும் அனுப்பி வைக்கிறார்கள்.

13 மாதங்கள் கடந்தும்...

கரும்பு அறுவடைக்கு கூலியாட்கள் பயன்படுத்தப்படுவதால் அதிகமாக செலவாகிறது. சில ஆலை நிர்வாகம் எந்திரங்களை கொண்டு கரும்பு அறுவடை செய்து வருகின்றன. இப்பகுதி விவசாயிகள் பெரும்பாலும் பலவகையான கரும்பு ரகங்களை பயிரிட்டு வருகின்றனர். அதில் குறிப்பாக 8 மாதம் முதல் 12 மாதம் வரையிலான கரும்பு பயிர் உள்ளது.

இப்பகுதிகளில் பயிரிடப்படும் கரும்பை ஆலை நிர்வாகத்திடம் பதிவு செய்து, அதை குறிப்பிட்ட காலத்துக்குள் அறுவடை செய்து அனுப்பி வைப்பது வழக்கம். ஆனால் கடந்த ஆண்டு பயிரிடப்பட்ட கரும்புகளை 13 மாதங்கள் கடந்தும் அறுவடை செய்ய ஆலை நிர்வாகம் அனுமதி வழங்காததால், கரும்புகள் அனைத்தும் பூப்பூக்க தொடங்கி விட்டன. கரும்பு பூத்து விட்டால் கரும்பின் எடை குறைந்து விடுவது மட்டுமின்றி சர்க்கரை கிடைப்பதும் இல்லை என விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். 


இதுகுறித்து பெருந்துறைப்பட்டு பகுதியை சேர்ந்த விவசாயி பலராமன் கூறுகையில், 'கரும்பு பயிரிடும் போது 8 முதல் 9 மாதத்துக்குள் கரும்பை அறுவடை செய்து ஆலைக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஆனால் ஆலை நிர்வாகம் அப்படி வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதில்லை. மாறாக 10 முதல் 13 மாதங்கள் ஆனாலும் விவசாய நிலங்களில் கரும்பு வெட்டப்படாமல் இருந்து வருகிறது.

இதன் காரணமாக கரும்பு முழுவதும் பூப்பூத்து தட்டை போல் ஆகி விடுகிறது. எடையும் குறைந்து விடும். ஒரு ஏக்கருக்கு குறைந்த பட்சம் 40 முதல் 60 டன் கரும்பு வரும் என்றால், பூப்பூத்த கரும்பு 30 டன்னுக்கும் குறைவாகவே எடை வரும். இதனால் பல்லாயிரம் ரூபாய் செலவு செய்தும், செலவு தொகையை கூட எங்களால் எடுக்க முடியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறிப்பிட்ட காலத்துக்குள் கரும்பை வெட்டுவதற்கு அனுமதி வழங்க வேண்டும், என்றார்.

விவசாயிகளுக்கு லாபம் கிடையாது


இதேபோல் தலையாம்பள்ளம் பகுதியை சேர்ந்த எத்திராஜ் கூறுகையில், கரும்பு கட்டுப்பாட்டு சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ள ஆலைகளுக்கு முறையாக பதிவு செய்யப்பட்டுள்ள கரும்புகளை வெட்டி அனுப்புவது மட்டுமல்லாமல் வெளி ஆலைகளுக்கும் அனுப்ப வேண்டும் என்றால் முறையான அனுமதி பெற வேண்டும். அப்படி கரும்புகளை அறுவடை செய்து அனுப்பினால் மட்டுமே வெட்டு கூலி நிர்ணயம் சரியாக இருக்கும். குறித்த நேரத்தில் பயிரிடப்பட்ட கரும்பை அறுவடை செய்யவும் முடியும். இப்பகுதிகளில் அதிகளவில் கரும்புகளை வெட்டுவதற்கு ஆட்களுக்கு அதிகளவில் கூலியாக செலவிடப்படுகிறது.

குறிப்பாக ஒரு டன் கரும்பு ரூ.2,500 என்றால் அதில் கரும்புகளை வெட்டுபவர்களுக்கு ரூ.1,100 முதல் ரூ.1,200 வரை செலவாகிறது. இதனால் விவசாயிகளுக்கு எந்த ஒரு லாபமும் கிடைப்பதில்லை. இதனால் செலவு செய்த தொகையை கூட பெற முடியவில்லை எனத் தெரிவித்தார்.

நரியாபட்டு பகுதியை சேர்ந்த விவசாயி கோபி கூறுகையில், இப்பகுதிகளில் பெரும்பாலும் கரும்பு சாகுபடி மட்டுமே பிரதான பயிராக உள்ளது. இப்பகுதிகளில் தண்ணீர் பற்றாக்குறையை சமாளித்து கிணற்றில் இருக்கும் தண்ணீரை மட்டுமே பாய்ச்சி கரும்பு பயிரை கஷ்டப்பட்டு வளர்த்தாலும் விவசாயியாகிய எங்களுக்கு எந்த ஒரு பயனும் இல்லை. ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு எந்தவிதமான உதவிகளும் செய்வது கிடையாது.

நடவடிக்கை எடுக்க வேண்டும்

குறிப்பாக ஆலைக்கு தேவையான கரும்பை விவசாயிகளாகிய நாங்கள் சாகுபடி செய்து வைத்திருந்தும், அந்தக் கரும்பை குறித்த நேரத்திலும் விரைவாகவும் வெட்டுவதற்கு அனுமதி வழங்குவதில்லை. மாறாக சில இடங்களில் பதிவு இல்லாத கரும்புகளை கூட ஆலைக்கு வெட்டி அனுப்பி வைக்கிறார்கள். ஆனால் நாங்கள் ஆலைக்கு சென்றால் எங்களை அலைக்கழிப்பது மட்டுமல்லாமல் மற்ற இடங்களிலும் வெட்டுவதற்கு நாங்கள் அனுமதி கொடுக்கவில்லை. உங்களுக்கு நாங்கள் எப்படி அனுமதி கொடுப்பது? என்று கூறி வருகின்றனர்.

இப்பகுதிகளில் 13 மாதங்கள் கடந்தும் கரும்பை வெட்டாமல் காலம் தாழ்த்தி வருவதால் கரும்புகள் பூப்பூக்க தொடங்கி உள்ளன. இதனால் கரும்பு பயிரிட்டும் எந்த விதமான பயன்படும் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே விரைந்து இந்த கரும்புகளை வெட்டுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், எனக் கோரிக்கை விடுத்தார்.

இதுகுறித்து ஆலை நிர்வாக அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, நாங்கள் co.11015 ரக கரும்பை சாகுபடி செய்ய விவசாயிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால் விவசாயிகள் அந்த வகையான கரும்பை சாகுபடி செய்து வருகிறார்கள். எனவே இந்த ரக கரும்புகளை விவசாயிகள் பயிரிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றார்.

இதுபற்றி விவசாயிகள் கூறுகையில் co. 11015 ரக கரும்புகளை விவசாயிகள் சாகுபடி செய்து, அதை கூட்டுறவு சர்க்கரை ஆலை நிர்வாகம் பதிவு செய்துள்ளது என தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்