மடத்துக்குளம் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவை தாமதமாவதால் கரும்பு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படும் நிலை உள்ளது.
பலமுறை பழுது
மடத்துக்குளத்தையடுத்த கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது.இந்த ஆலைக்கு உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம், நெய்க்காரப்பட்டி, ஓட்டன்சத்திரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஒப்பந்த அடிப்படையில் கரும்பு வழங்கி வருகிறார்கள். ஆனால் சமீப காலங்களாக கரும்பு சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் குறைந்து வருகிறது.அதற்கு அமராவதி சர்க்கரை ஆலை சரிவர செயல்படாததும் ஒரு காரணமாக கூறப்படுகிறது. பழமையான எந்திரங்கள் முறையாக பராமரிக்கப்படாத நிலையில் கடந்த ஆண்டு அரவையின் போது பலமுறை பழுது ஏற்பட்டது. இதனால் நிர்வாகத்துக்கும் விவசாயிகளுக்கும் இழப்பு ஏற்பட்டது. எனவே நடப்பு ஆண்டில் பழுதில்லாத வகையில் முழுமையாக இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து ரூ 10 கோடி செலவில் ஆலையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடும் இழப்பு
இந்த பணிகள் உரிய நேரத்தில் முடியாமல் இழுபறியாக நீடித்து வந்த நிலையில் கடந்த 10-ந்தேதி இளஞ்சூடு ஏற்றும் விழா நடைபெற்றது.மேலும் 17-ந்தேதிக்குள் பராமரிப்புப் பணிகளை முடித்து சோதனை ஓட்டம் நடத்தவும், இன்று (வெள்ளிக்கிழமை) அரவை தொடங்கவும் திட்டமிடப்பட்டது. ஆனால் இதுவரை பணிகள் முடியாமல் இழுபறியாக நீடித்து வருகிறது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
சர்க்கரை ஆலை மீது விவசாயிகளின் நம்பிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதற்கு முன் பணியாற்றிய, ஆலையின் மேலாண்மை இயக்குனர் விவசாயிகளிடம் நம்பிக்கை ஏற்படுத்தும் விதமாக பல நடவடிக்கைகள் மேற்கொண்டார். இதனாலேயே 2184 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டது. எனவே அரவைப் பருவம் வரை அவர் பணியில் நீடிக்க வேண்டும் என்று விவசாயிகள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு இழப்பு
ஆனால் விவசாயிகளின் கோரிக்கையை கண்டுகொள்ளாமல் புதிய மேலாண்மை இயக்குனர் நியமிக்கப்பட்டார். அவருக்கு ஆலையின் நிலை குறித்து அறிந்து கொள்வதற்கு போதிய அவகாசம் இல்லாத நிலையில் அரவைப் பருவம் தொடங்கி விட்டது. மேலும் ஆலையின் பராமரிப்புப்பணிகளும் உரிய நேரத்தில் முடியாமல் இழுபறியாகவே நீடிக்கிறது.
இதனால் அரவை தொடங்குவதற்கு ஒரு மாதத்துக்கு மேல் தாமதமாகிறது. உரிய பருவத்தில் கரும்பு அறுவடை செய்யப்படாததால் விவசாயிகளுக்கு கடும் இழப்பு ஏற்படும்.இதே நிலை நீடித்தால் வரும் காலங்களில் அமராவதி சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஒப்பந்தம் செய்ய விவசாயிகள் முன்வர மாட்டார்கள். இதனால் ஆலையை மூடும் நிலை ஏற்படும். எனவே முழுமையாக நிதி ஒதுக்கி ஆலையை நவீனப்படுத்தி, பழுதில்லாமல் உரிய பருவத்தில் முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் கூறினர்.