புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி விவசாயி பலி
நாகலாபுரம் அருகே புகைமூட்டத்தில் மூச்சுத்திணறி விவசாயி பலியானார்.
எட்டயபுரம்:
நாகலாபுரம் அருகேயுள்ள என்.வேடப்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த காளியப்பன் (வயது 75). விவசாயி. இவர் நேற்று முன்தினம் மாலையில் தனது நிலத்தில் மக்காச்சோள அறுவடைக்கு பின்னர் கிடந்த கழிவுகளை தீ வைத்து எரிந்துள்ளார். இதில், உருவான புகை மூட்டத்தில் காளியப்பனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது. அவர் அங்கேயே மயங்கி விழுந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு காளியப்பனுக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், வழியிலேயே காளியப்பன் உயிரிழந்தார். இதுகுறித்து சங்கரலிங்கபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.