விவசாய பயன்பாட்டிற்கு இடம் இல்லாமல் அவதி:விவசாய களத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கு தள்ளுபடி- ஐகோர்ட்டு உத்தரவு

விவசாய பயன்பாட்டிற்காக இருந்த களத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

Update: 2023-05-17 20:35 GMT


விவசாய பயன்பாட்டிற்காக இருந்த களத்தில் ஊராட்சி அலுவலக கட்டிடம் கட்டுவதை எதிர்த்த வழக்கை தள்ளுபடி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.

நெல் பதப்படுத்தும் களங்கள்

மதுரை மாவட்டம் திருவாலவாயநல்லூரை சேர்ந்தவரும், பாரதி கிஷான் சங்கத்தின் மாநில துணைத்தலைவருமான பார்த்தசாரதி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

எங்கள் கிராமத்தில் விவசாயிகளின் பயன்பாட்டிற்காக 3 களங்கள் இருந்தன. இங்கு நெல் அறுவடை செய்து, பதப்படுத்தும் பணிகள் உள்ளிட்ட விவசாய பணிகள் நடந்தன. இவற்றில் ஏற்கனவே ஒரு களத்தில் பள்ளிக்கூடம் கட்டப்பட்டுவிட்டது. மற்றொரு களத்தை மதவழிபாட்டுத்தலத்திற்காக மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே வழங்கிவிட்டது. 3-வதாக உள்ள கிழக்கு பகுதி களத்தில் கழிப்பறை கட்டப்பட்டு உள்ளது.

மீதமுள்ள இடத்தை விவசாய பயன்பாட்டிற்காக இருந்து வந்தது. தற்போது அந்த களத்தில் இருக்கும் கழிப்பறையை அகற்றிவிட்டு, ஊராட்சி அலுவலகம் கட்டுவதற்கு முடிவு செய்யப்பட்டு, கட்டுமான பணிகள் நடக்கின்றன.

ஊராட்சி கட்டிடம்

இதனால் விவசாயிகள் தங்களது விவசாய பயன்பாட்டிற்கான இடம் இல்லாமல் அவதிப்படும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஏற்கனவே மத வழிபாட்டுக்காக களத்தை வழங்கியதை எதிர்த்த வழக்கு நிலுவையில் உள்ளது. எனவே விவசாயிகளின் நலன் கருதி, ஊராட்சி அலுவலகத்தை வேறு இடத்தில் கட்ட வேண்டும் என்று அதிகாரிகளிடம் முறையிட்டோம். ஆனால் இதுவரை எந்த பதிலும் இல்லை.

எனவே, எங்கள் கிராமத்தில் உள்ள கிழக்குபகுதி களத்தின் மொத்த பரப்பளவையும் விவசாய களமாக மாற்றித்தர வேண்டும். ஊராட்சி அலுவலக கட்டுமானத்தை நிறுத்திவிட்டு, வேறு இடத்தில் அமைக்க வேண்டும் என்று உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

தள்ளுபடி

இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா, நீதிபதி விக்டோரியா கவுரி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் வக்கீல் ஆஜராகி, விவசாயிகள் பயன்படுத்தி வந்த 3 களமும் தற்போது இல்லாத நிலை ஏற்பட்டுவிட்டது. இதனால் விவசாயிகள் தங்களின் விவசாய பயன்பாட்டிற்கு களம் இல்லாமல் தெருக்களை பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.

முடிவில், மனுதாரர் தெரிவிக்கும் இடம் கிராம நத்தம் என வகைப்படுத்தப்பட்டு உள்ளது. அங்கு தான் ஊராட்சி அலுவலகம் கட்டப்படுகிறது. எனவே இதில் தலையிட முடியாது என்பதால் இந்த மனுவை தள்ளுபடி செய்கிறோம் என நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்