அவதிப்படும் பெற்றோர்கள்: ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்கள்-காலத்தின் கட்டாயமா? கருத்து சொல்கிறார்கள்

அவதிப்படும் பெற்றோர்கள் ஆடம்பர விழாக்களாக மாறிவரும் திருமணங்களால் அவதிப்படும் பெற்றோர்கள் இவை காலத்தின் கட்டாயமா? என்று கருத்துகளை தெரிவித்துள்ளனர்.

Update: 2023-01-10 21:21 GMT

மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளும் விதமாகவும், உறவுகளைப் புதுப்பிக்கும் நிகழ்வாகவுமே திருமணங்கள் இத்தனை காலமும் நடந்து வந்தன. அளவான விருந்தினர்கள், அசத்தலான ஏற்பாடுகள், நடுவீட்டில் பந்தி வைத்து, ஓடி, ஓடி உபசரிக்கும் உறவுகள் என கல்யாணங்களில் சந்தோஷம் பொங்கி வழிந்த நாட்கள் உண்டு.

மண்டபமே தீர்மானிக்கிறது

கிராமங்களில் வீடுகளிலேயே திருமணத்தை நடத்தி முடித்து விடுவார்கள். அந்தளவுக்கு கிராமங்களிலும் சரி, அவர்களது மனங்களிலும் சரி இடவசதி இருக்கும். ஆனால் நகரங்களில் அப்படி அல்ல. திருமணங்களை மண்டபங்களில் நடத்த வேண்டிய சூழல்தான் இருக்கிறது.

முகூர்த்த நாட்களில் திருமண மண்டபங்கள் கிடைப்பதே அரிதாகிவிடும். சில நேரங்களில் மண்டபங்கள் காலியாக உள்ள நாட்களில் திருமணத்தை வைத்துக்கொண்டால் என்ன? என்று யோசிப்போரும் உண்டு. முகூர்த்தத் தேதியைக்கூட இங்கே மண்டபங்களே தீர்மானிக்கின்றன.

திருமண 'பேக்கேஜ்'

முன்பெல்லாம் ஒவ்வொன்றையும் பார்த்துப்பார்த்து உறவினர்கள் உதவியோடு செய்த நிலைமாறி, இப்போது 'பேக்கேஜ்' என்ற அடிப்படையில் திருமண நிகழ்வுகளை நடத்தும் கட்டாயத்திற்கு வந்து இருக்கிறோம். அதை நடத்திக்கொடுக்கவும் ஏஜென்சிகள் முளைத்து இருக்கின்றன.

'கையில காசு, வாயில தோசை கதைதான்.ஒவ்வொருவரையும் நேரில் சந்தித்து அழைத்தது, அழைப்பிதழ் கொடுத்தது எல்லாம் மாறி, 'வாட்ஸ்-அப்'பில் அழைப்பிதழ் அனுப்புவது, 'ஜிபே', 'போன்பே' வழியாக மொய் எழுதுவது போன்ற எந்திரத்தனமான கலாசாரத்தை நாம் கடைப்பிடிக்கத் தொடங்கி விட்டோம்.

விழிபிதுங்கும் பெற்றோர்

திருமணங்களை பலர் தங்களது செல்வாக்கைப் பறைசாற்றும் ஆடம்பரத் திருவிழாக்களாகவே இப்போது நடத்தி வருகின்றனர். திருமண மண்டபத்தை 'புக்' செய்வது முதல், வரவேற்பு, டெக்கரேஷன், மேக்கப், ஆடல்-பாடல், போட்டோ- வீடியோ, சாப்பாடு என ஒவ்வொன்றிலும் ஆடம்பரம் புகுந்துவிட்டது.

ஆனால் நடுத்தர மக்களுக்கு திருமணம் ஒரு மிகப்பெரிய வேள்வியாகவே இருக்கிறது. காதல் திருமணமாக இருந்தாலும் சரி, நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருந்தாலும் சரி, திருமண செலவுகளால் பெற்றோர் விழிபிதுங்கி போகிறார்கள். அப்படி திருமண நிகழ்வுகளில் ஆடம்பரம் தலைதூக்க என்ன காரணம்? என்னென்ன செலவுகள் அதிகரித்திருக்கிறது? என்று சிலரிடம் கருத்து கேட்கப்பட்டது. அதன் விவரம் வருமாறு:-

மானியம் வழங்க வேண்டும்

திருமண மண்டப உரிமையாளர் ஜே.வி.ஆர்.அருண் கூறியதாவது:-

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை மண்டபங்களில் 2 நாட்கள் திருமண விழா நடைபெறும். முதல் நாள் இரவு, அடுத்து நாள் காலை, மதியம் என 3 வேளை மண்டபங்களில் சாப்பாடு பரிமாறுவார்கள். கொரோனா தொற்று பாதிப்புக்கு பிறகு தற்போது பல திருமண விழாவில் காலை ஒரு வேளை மட்டுமே சிற்றுண்டி வழங்கி திருமண விழா முடிவடையும் நிலை ஏற்பட்டு உள்ளது.

சிறிய மண்டபங்களில் திருமணம் உள்ளிட்ட விழாக்கள் தற்போது நடத்தப்படுவது அரிதாக உள்ளது. காரணம் நடுத்தர மக்களிடம் பணப்புழக்கம் அதிகம் இல்லை. இதே நிலை நீடித்தால் சிறிய மண்டபங்கள் காலப்போக்கில் காணாமல் போய்விடும். எனவே திருமண மண்டப உரிமையாளர்களை பாதுகாக்க அரசு மின்கட்டணத்தில் சலுகை, மானியம் வழங்க வேண்டும்.

வரவேற்கத்தக்கது

சேலம் மாவட்ட சாமியானா, டெக்கரேட்டர், சமையல் பாத்திரங்கள் வாடகை அமைப்பாளர்கள் நலச்சங்க தலைவர் மோகன்:-

திருமண மண்டபங்களில், மேடை அமைத்தல், நாற்காலிகள் வரிசைப்படுத்துவது, பந்தல், விளக்குகள் அமைத்தல், சமையல் பாத்திரங்கள், அலங்காரம், வாழை மரம் கட்டுவது முதல் தோரணம் அமைக்கும் வரையிலும், அதே போன்று சாப்பிட்ட பின்பு இலை எடுத்தல் உள்ளிட்ட அனைத்து பணிகளும் செய்து கொடுக்கிறோம். குறிப்பாக ஒரு திருமண விழா என்றால் 90 சதவீத பணிகள் எங்களுடையது. ஆரம்ப கட்டத்தில் இந்த தொழில் மிகச்சிறப்பாக இருந்தது. கொரோனா தாக்கத்திற்கு பிறகு கடந்த 3 ஆண்டுகளாக தொழில் நசிந்து வருகிறது. அதாவது கொரோனா தொற்று பாதிப்பிற்கு பிறகு பொதுமக்களே அவரவர் சொந்தங்களை விழாக்களுக்கு அழைப்பதை குறைத்துக்கொண்டனர். முன்பெல்லாம் 100 பேரை அழைத்தால் தற்போது 20 பேர்களை மட்டுமே அழைக்கின்றனர். முன்பு ஒரு வீடு கிரக பிரவேஷம் என்றாலே ரூ.10 ஆயிரம் வரை பில் தொகை கொடுக்க வேண்டி வரும். ஆனால் தற்போது ரூ.4 ஆயிரம் கூட வருவது இல்லை.

அதே போன்று பெரிய திருமண விழாக்களுக்கு மண்டபங்களில் டெக்ரேசன் செய்வதற்கு குறைந்த பட்சம் ரூ.3 லட்சம் வரை பில் தொகை வரும். தற்போது மிக குறைந்த அளவே வருமானம் கிடைக்கிறது. காரணம் போட்டி தான். ஒரு சிலர் குறைந்த விலைக்கு ஒப்புக்கொள்கிறார்கள். அதே போன்று திருமணத்திற்கு முதல் நாள் ஒரு அலங்காரம், திருமணத்தன்று ஒரு அலங்காரம் என ஒரு திருமண விழாவில் 2 முறை அலங்காரம் செய்யப்படும். ஆனால் தற்போது ஒரு அலங்காரமே போதும் என்கிறார்கள். அதுவும் அலங்காரத்திற்கு தரமான பொருட்களை சிலர் பார்ப்பது இல்லை. விலையை மட்டுமே பார்க்கின்றனர். விலை குறைந்தால் தரம் குறைவு என்பதை பலர் புரிந்து கொள்வது இல்லை. இதனால் வருமானம் மிகவும் குறைவாகத்தான் கிடைக்கிறது.

ஆடம்பர செலவு

நடுத்தர குடும்பத்தை சேர்ந்த தம்பதி தமிழழகன்- லோகநாயகி:-

ஆத்மார்த்த திருமணங்கள் என்பது அந்த காலத்தில் கிராமங்களில் நடந்து வந்தன. இன்று போல் உணவு விடுதிகளில், ஆடம்பர செலவு செய்து ஒரு இலைக்கு ரூ.500, ரூ.1,000 என்று இல்லாமல் திருமணத்திற்கு முன்பாகவே உறவினர்களை வீட்டுக்கு அழைத்து திருமண முன்னேற்பாடுகளில் ஈடுபடுவார்கள். திருமணம் என்றால் அந்த கிராம மக்களே தங்கள் வீட்டு கல்யாணம் போல் சென்று விருந்து உண்டு மகிழ்ச்சி அடைவார்கள். பொன், பொருள், சீர், வரதட்சணை என்று இல்லாமல், பசு, தானியம், கால்நடைகள் போன்றவற்றை வாழ்வாதாரமாக வழங்கி வாழ்வித்தார்கள். ஆனால் நாகரீகம் என்ற பெயரில் 100 பவுன் என்றெல்லாம் பேரம் பேசி திருமணங்கள் வியாபாரம் போல் நடந்து வருகின்றன. இதனால் சமுதாயத்தில் எளிய மக்களும் ஆடம்பர திருமணத்தை நாடுவதால் சக்திக்கு மீறிய அளவு செலவு செய்து பிரச்சினைக்கு ஆளாகிறார்கள். எனவே கிராமத்தில் நடைபெறும் எளிய திருமணங்களால் பொருளாதார இழப்பினை ஈடுசெய்ய முடிகிறது. அதே போன்று கோவில்களில் நடைபெறும் எளிய திருமணங்களால் ஆடம்பர செலவுகளை குறைத்து, அந்த செலவு தொகையை எதிர்கால வாழ்க்கைக்கு பயன்படுத்தலாம். எனவே எளிய திருமணங்கள் சிறப்பானது.

சிறப்பாக இருக்கும்

சேலம் கோரிமேட்டை சேர்ந்த கல்லூரி மாணவி மேனகப்பிரியா:-

ஆடம்பர திருமண செலவு என்பது தேவை இல்லை. திருமணம் உள்ளிட்ட அனைத்து விழாக்களுக்கும் உறவினர்களை அழைத்து விழா நடத்துவதே சிறப்பாக இருக்கும். உறவினர்களும் நம்ப பிள்ளை திருமணத்திற்கு நாம் வேலை செய்யாமல், யார் வேலை செய்வார்கள் என்று கூறிக்கொண்டு ஒரு வாரத்திற்கு முன்பே திருமண வீட்டிற்கு வந்து திருமண வேலைகளை முன்னெடுத்து செல்வார்கள்.

திருமணத்தன்று உறவினர்கள் உணவு பரிமாறும் போது மகிழ்ச்சி ஏற்படும். எனவே ஆடம்பர திருமணத்தை விட, உறவினர்களை அழைத்து குறைந்த செலவில் திருமணம் நடத்துவதே சிறப்பாக இருக்கும்.

சொந்த, பந்தங்கள்

பூசாரிபட்டியை சேர்ந்த சஞ்சய்குமார்:-

பண்டைய காலங்களில் திருமணங்கள் என்றாலே சொந்த, பந்தங்களுடன் ஒரு விழா போன்று நடைபெறும். தற்போது நாகரீக காலத்தில் லட்சக்கணக்கில் திருமண மண்டபத்தை வாடகைக்கு எடுத்து வகை, வகையான உணவுகள், கேளிக்கை, இன்னிசை, ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் என திருமணங்கள் நடைபெற்று வருகின்றன.

உறவினர்களின் பிணைப்பு, குறைந்து தங்களுடைய செல்வாக்கை ஆடம்பரத்தை காட்டும் வகையிலேயே திருமணங்கள் தற்போது நடைபெறுகிறது. இது போன்ற திருமணங்களை பார்க்கும் நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த பெற்றோர்கள் தங்கள் மகன், மகளுக்கு சிறப்பாக திருமணம் செய்ய வேண்டும் என்ற நோக்கில் வரதட்சணையாக நகைகள், கார், மோட்டார் சைக்கிள், சீர்வரிசை பொருட்களை வழங்குவதோடு ஆடம்பரமாக திருமணத்தை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படுகின்றனர். இதனால் கடன் வாங்கி திருமணத்தை நடத்தி விட்டு கடனை கட்ட முடியாத சூழ்நிலையில் விழிபிதுங்கி நிற்கின்றனர். சிலர் தற்கொலை செய்து கொள்வதும் உண்டு. இந்த ஆடம்பரத்தை பெற்றோர்கள் தவிர்த்து பண்டைய காலங்கள் போல் உறவினர்கள், நண்பர்கள் புடை சூழ திருமணங்களை நடத்தினால் உறவும் வலுப்பெறும். பணமும் விரையமும் இருக்காது. பழைய கால திருமணம் முறைகள் திரும்ப நடைமுறைக்கு வர வேண்டும் என்பதே நடுத்தர வர்க்க பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

மக்களின் கருத்து

மொத்தத்தில் திருமணம் என்பது உறவுகளின் சங்கமமாக இருக்கலாம். அதில் ஆடம்பரம் தேவையில்லை, அன்பு மிகுதியாக இருந்தால் போதும் என்பதே பொதுமக்கள் அனைவரின் கருத்தாக இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்