தவிக்க வைக்கும் தங்கம்

தவிக்க வைக்கும் தங்கம் குறித்து பொதுமக்கள் கருத்து சொல்கிறார்கள்.

Update: 2022-12-05 20:14 GMT

அனைவரின் வாழ்க்கையிலும் சரி, அரசாங்கங்களின் இயக்கங்களிலும் சரி, தங்கம் ஓர் அங்கமாகவே இருந்து வருகிறது. ஏழை, எளியவர் முதல் வசதி படைத்தவர்கள் வரை அனைவரும் தங்கத்தின் மீது தாளாத மோகம் கொண்டு இருக்கிறார்கள்.

ஒரு குண்டுமணி தங்கம் கூட இல்லாமல் தமிழர்களின் இல்லங்களில் சுப துக்க காரியங்கள் நடப்பது இல்லை. அதே நேரத்தில் சாமானியர்கள், பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் என எல்லோராலும் தங்கம் ஒரு லாபகரமான, பாதுகாப்பான முதலீடாக பார்க்கப்படுகிறது.

பங்குச்சந்தை மற்றும் ரியல் எஸ்டேட் போன்ற இதரச் சொத்துகள் வீழ்ச்சி அடையக்கூடும். ஆனால் தங்கம் எப்போதும் முன்னணியிலேயே நிற்கும். நிதி நெருக்கடியா? தங்கத்தை அடகுவைத்து அல்லது விற்று உடனடியாக பணமாக்கிகொள்ள முடியும்.

விலை நிர்ணயம்

இந்தியாவுக்கு துபாய், லண்டன் போன்ற இடங்களில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யப்படுகிறது. நமது நாட்டில் மும்பைதான் தங்க 'நெட்வொர்க்' மையமாக செயல்பட்டு வருகிறது. அங்கிருந்தே இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் தேவையான தங்கம் 'சப்ளை' செய்யப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தின் விலையை நிர்ணயம் செய்வது, 'லண்டன் புல்லியன் மார்க்கெட் அசோசியேசன்'தான். ஒவ்வொரு நாளும் (விடுமுறை நாட்களை தவிர) காலை 10.30 மணிக்கும், மதியம் 3 மணிக்கும் அமெரிக்க டாலர்களில் இந்த விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அதை மையமாக வைத்தும், இன்சூரன்ஸ், இறக்குமதி வரி, போக்குவரத்துச் செலவு ஆகியவற்றையும் சேர்த்தும் அனைத்து நாடுகளிலும் விலை நிர்ணயம் ஆகிறது.

இந்தியாவில் மும்பையில் தான் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. உலகச்சந்தையில் எப்படி காலை, மாலையில் விலை நிர்ணயிக்கப்படுகிறதோ, அதேபோல் இங்கும் விலை தீர்மானிக்கப்படுகிறது. இவ்வாறாக விலை நிர்ணயம் செய்யப்படும் தங்கத்தின் விலை ஆண்டுக்காண்டு மேல்நோக்கியே பயணிக்கிறது.

ஏறுமுகத்தில் தங்கம் விலை

1920-ம் ஆண்டில் ஒரு பவுன் தங்கம் ரூ.21-க்கு விற்பனை ஆன நிலையில், 2001-ம் ஆண்டில் ரூ.3 ஆயிரத்து 368 ஆகவும், 2011-ம் ஆண்டில் ரூ.22 ஆயிரத்து 104 ஆகவும் உயர்ந்துகொண்டே வந்தது.

கடந்த 2020-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந் தேதி ஒரு கிராம் ரூ.5 ஆயிரத்து 416-க்கும், ஒரு பவுன் ரூ.43 ஆயிரத்து 328-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுவரை இல்லாத விலை உயர்வாக இது இன்றளவும் பார்க்கப்படுகிறது. அதன்பின்னர் விலை சற்று குறையத் தொடங்கி, கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஒரு பவுன் ரூ.37 ஆயிரத்து 880-க்கு விற்கப்பட்டது. இப்படியாக தொடர்ந்து தங்கம் விலை ரூ.36 ஆயிரத்திற்கும் ரூ.40 ஆயிரத்திற்கும் இடையில் இருந்துவந்தது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷியா-உக்ரைன் இடையே போர் தொடங்கிய நேரத்தில், முதலீட்டாளர்கள் பலர் தங்கத்தில் முதலீடு செய்ய தயக்கம் காட்டினர். இதனால் அதன் விலையும் சற்று சரிந்து காணப்பட்டது. அதையடுத்து மீண்டும் தங்கத்தின் விலை பெருமளவில் ஏறுமுகத்திலேயே இருந்தது.

ஒரு பவுன் ரூ.40 ஆயிரம்

கடந்த மார்ச் மாதம் 7, 8, 9-ந் தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 14, 15, 16, 17, 18, 19-ந் தேதிகளிலும் ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை கடந்து விற்பனை ஆனது. அதைத் தொடர்ந்து ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டுவந்த தங்கம் விலை, கடந்த சில நாட்களாக தொடர்ந்து உயர்ந்துவருவதை பார்க்க முடிகிறது. கடந்த 2-ந் தேதியன்று மீண்டும் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. தொடர்ந்து ஏறுமுகத்தில் இருப்பதால் தங்கம் விலை ஏற்படுத்தும் தாக்கம் குறித்து பொதுமக்களிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:-

பாதிப்பை ஏற்படுத்தாது

தமிழ்நாடு நகை வியாபாரிகள் கூட்டமைப்பு முதன்மை ஆலோசகர் சையது அகமது கூறும்போது, 'கொரோனா காலத்தில் எவ்வளவோ தொழில்கள் அடிபட்டன, சில தொழில்கள் அடையாளம் தெரியாமல் போய்விட்டன. ஆனால் தங்க வியாபாரம் மட்டும் தலைநிமிர்ந்துதான் இருக்கிறது.

இதற்கு மக்கள் தங்கத்தின் மீது வைத்திருக்கும் நம்பிக்கைதான் முக்கியக் காரணம். ஒரு கிராம் தங்கம் ரூ.500 ஆக இருந்தபோதும் சரி, இப்போது ரூ.5 ஆயிரமாக இருக்கும்போதும் சரி, நகைகள் வாங்குபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கவே செய்கிறது. எனவே இந்த விலை உயர்வு மக்களுக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது. தங்கத்துக்கான மவுசு எப்போதும் குறையாது' என்றார்.

சுமை தான்

கடலூர் அமுதா:- தங்கம் வாங்க வேண்டும் என்றால் மகளிர் சுயஉதவி குழுவில் தான் கடன் வாங்குவோம். அந்த கடனை கொஞ்சம், கொஞ்சமாக அடைப்போம். ஆனால் இப்போது பவுன் ரூ.40 ஆயிரத்தை தாண்டி விட்டது. இது எங்களை போல் உள்ள ஏழை, எளிய மக்கள் தங்கத்தை வாங்க முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. ஆடம்பர பொருளாக இருந்த தங்கம் தற்போது அனைத்து வீடுகளிலும் உள்ளது. கவரிங் நகையை அணிந்தாலும், ஒரு குண்டுமணியாவது தங்கம் அணிந்தால் தான் மதிப்பு என்பார்கள். அந்த அளவுக்கு தங்கத்தின் தாக்கம் உள்ளது. இந்த நிலையில் தங்கத்தின் விலை உயர்வு ஏழை மக்களுக்கு ஒரு சுமைதான்.

செய்கூலி ஏற்றம்

சொட்டவனம் ராஜலட்சுமி:- தங்கம் விலை நாளுக்கு நாள் ஏறி வருகிறது. என்றாவது ஒரு நாள் தங்கம் விலை குறைந்து விடும். வாங்கிவிடலாம் என்று நினைத்தால் ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டு தான் செல்கிறதே தவிர குறையவில்லை. இந்த தங்கம் விலை உயர்வு ஏழை, எளிய மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. திருமணம் ஆகி ஒரு வீட்டிற்கு பெண் சென்றால் எத்தனை பவுன் சீதனமாய் கொண்டு வந்தாய் என கேட்கிறார்கள்.

திருமணம் என்ற சடங்கில் தங்கமும் ஒரு அங்கமாக மாறிவிட்டது. இதனால் பெண் பிள்ளைகளை பெற்ற தாய்மார்களுக்கு இந்த விலை ஏற்றம் தாங்க முடியாத சுமையாக மாறி வருகிறது. இந்த விலை ஏற்றம் பல பெண்களின் திருமணத்தை தள்ளி போட்டு முதிர் கன்னிகளாக்கி வருகிறது. தங்கம் விலை ஏறினாலும் மறுபுறம் செய்கூலியும் சேதாரமும் ஏடா கூடமாக ஏறிக் கொண்டிருக்கிறது. தங்கம் விலை உயர்வை ஒரு கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வந்து, பல பெண்களின் திருமண வாழ்வுக்கு பிள்ளையார் சுழியை அரசு தான் போட வேண்டும்.

கட்டுப்படுத்த வேண்டும்

சிதம்பரம் பொன்னேரிக்கரை பகவதி:- கடந்த சில நாட்களாக தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால் ஏழை, எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தங்கம் வாங்க முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சில இடங்களில் விலை உயர்வால் தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் பொதுமக்கள் தவித்து வருகின்றனர். இப்படி தங்கம் விலை உயர்ந்து கொண்டே போனால் ஏழை எளிய மக்களுக்கு தங்கம் எட்டாக்கனியாகவே மாறிவிடும். இதை தவிர்க்க தங்கம் விலையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்