நெல்லையில் திடீர் மழை; பொதுமக்கள் மகிழ்ச்சி

நெல்லையில் நேற்று திடீரென்று மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Update: 2023-08-29 21:39 GMT

நெல்லை மாவட்டத்தில் அக்னி நட்சத்திர காலம் முடிந்த பின்னரும் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. குறிப்பாக கடந்த சில வாரங்களாகவே வெயில் சுட்டெரித்தது. 105 டிகிரி வரை பதிவானது.

மதியம் அனல் காற்றும் வீசியதால் பொதுமக்கள் மதிய நேரத்தில் வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். எப்போது, மழை பெய்யும் என்று ஏங்கிக் கொண்டு இருந்தனர்.

நேற்றும் காலையில் இருந்து மதியம் வரை வெயில் அடித்தது. பின்னர் வானில் கருமேகங்கள் திரண்டன. குளிர்ந்த காற்றும் வீசியது. மாலை 4.15 மணி அளவில் திடீரென்று இடியுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.

நெல்லை சந்திப்பு, டவுன், கொக்கிரகுளம், பாளையங்கோட்டை, பேட்டை, சுத்தமல்லி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக பெய்த இந்த மழை சுமார் 20 நிமிடங்கள் நீடித்தது. அதன் பின்னர் சாரல் மழை போல் தூறிக்கொண்டு இருந்தது.

இந்த மழை காரணமாக நெல்லை சந்திப்பு, டவுன் பகுதிகளில் சாலையில் தண்ணீர் குளம் போல் தேங்கி காணப்பட்டது. அதில் வாகனங்கள் ஊர்ந்து சென்றன.

பள்ளிக்கூடம் முடிந்து சென்ற மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பலரும் மழையில் நனைந்தபடி சென்றனர். சிலர் ஒதுங்கி நின்று மழை நின்ற பின்னர் தங்களது வீடுகளுக்கு புறப்பட்டனர்.

இதேபோல் பாபநாசம், மணிமுத்தாறு பகுதியிலும் நேற்று மாலையில் சூறைக்காற்றுடன் மழை பெய்தது. சில இடங்களில் லேசான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. கடும் வெயிலால் அவதிப்பட்டு வந்த மக்கள் இந்த திடீர் மழையால் மகிழ்ச்சி அடைந்தனர்.


Tags:    

மேலும் செய்திகள்