நடுரோட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்த பள்ளி பஸ்

அரக்கோணம் அருகே மாணவர்களை அழைத்துவந்த தனியார் பள்ளிக்கூட பஸ் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவர்கள் உயிர்த்தப்பினர்.

Update: 2022-09-10 15:43 GMT

அரக்கோணம் அருகே மாணவர்களை அழைத்துவந்த தனியார் பள்ளிக்கூட பஸ் திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக கண்டுபிடிக்கப்பட்டதால் மாணவர்கள் உயிர்த்தப்பினர்.

பள்ளி பஸ்

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஜோதிநகர் பகுதியில் தனியார் மெட்ரிக் பள்ளி உள்ளது. அதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். அரக்கோணம் அடுத்த சேந்தமங்கலம் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மாணவர்களை பள்ளி பஸ்சில் அழைத்து வருகின்றனர். அதன்படி நேற்று மாணவ- மாணவிகளை அழைத்து வர அரக்கோணத்தை அடுத்த அம்மனூரை சேர்ந்த டிரைவர் சீனிவாசன் பஸ்சை ஓட்டி சென்றுள்ளார்.

காலை 6 மணி அளவில் சேந்தமங்கலத்தில் இருந்து 4 மாணவர்களை ஏற்றிக்கொண்டு அங்குள்ள ரெயில்வே கேட் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பஸ்சின் முன்பகுதியில் இருந்து புகை வருவதை எதிரே வந்தவர்கள் பார்த்து டிரைவரிடம் தெரிவித்தனர். உடனே பஸ்சை நிறுத்திவிட்டு, என்ஜின் பகுதியில் இருந்து புகை வருவதை பார்த்து உடனடியாக பஸ்சில் இருந்த 4 மாணவர்களையும் கீழே இறக்கி விட்டார்.

தீப்பிடித்து எரிந்தது

அதற்குள் தீ பிடித்து மளமளவென கொழுந்து விட்டு எரியத்தொடங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் நிறுத்தப்பட்டன. தகவல் அறிந்ததும் அரக்கோணம் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர். ஆனாலும் பஸ் முழுவதுமாக எரிந்து விட்டது. உடனடியாக மாணவர்களை இறக்கி விட்டதால் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படவில்லை.

இது குறித்து நெமிலி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். பள்ளி பஸ் நடுரோட்டில் திடீரென தீ பிடித்து எரிந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்