பஸ் போக்குவரத்து திடீர் நிறுத்தம்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் திருச்செந்தூர் பஸ் போக்குவரத்து திடீர் நிறுத்தப்பட்டதால் இரவில் பயணிகள் அவதிப்பட்டனர்
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூருக்கு இரவில் குறிப்பிட்ட நேரத்துக்கு ஒரு முறை பஸ்கள் இயக்கப்படும். திருச்செந்தூர் ஆன்மிக சுற்றுலா தலம் என்பதால் இரவு, பகலில் ரெயில் மற்றும் பஸ்கள் மூலம் ஏராளமான பக்தர்கள் சென்று வருகிறார்கள்.
மேலும் தற்போது தசரா திருவிழாவையொட்டி குலசேகரன்பட்டினம் கோவிலுக்கும் மாலை அணிந்து தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சென்று வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று இரவு நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து திருச்செந்தூர் மற்றும் குலசேகரன்பட்டினம் செல்வதற்கு ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் காத்திருந்தனர். ஆனால் நேற்று இரவு 9.30 மணிக்கு பிறகு திருச்செந்தூர் செல்லும் பஸ் போக்குவரத்து திடீரென்று நிறுத்தப்பட்டது.
அதே நேரத்தில் மதுரை, நாகர்கோவில் உள்ளிட்ட பிற நகரங்களுக்கு மிக குறைவான பஸ்களே இயக்கப்பட்டன. இதுகுறித்து போக்குவரத்து கழக தகவல் மையத்தில் கேட்டபோது சரியான பதில் இல்லை என்று கூறப்படுகிறது. பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டதையொட்டி பஸ்கள் நிறுத்தப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இதனால் நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்ல முடியாமல் பயணிகள் இரவில் கடும் அவதிப்பட்டனர்.