பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி மாணவ-மாணவிகள் திடீர் சாலை மறியல்
பள்ளி வளாகத்தில் தேங்கிய மழை நீரை வெளியேற்றக்கோரி காரிமங்கலம் அருகே மாணவ- மாணவிகள் திடீரென சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காரிமங்கலம்:
தேங்கிய மழைநீர்
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே உள்ள அனுமந்தபுரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அவ்வப்போது மழை பெய்து வருவதால் பள்ளியின் மேற்கூரைகள் சேதம் அடைந்துள்ளன. இதனால் மழைநீர் ஒழுகி பள்ளிக்கூடத்தில் தேங்கும் நிலை ஏற்பட்டது. இதனால் மாணவ, மாணவிகள் அவதிக்கு உள்ளானார்கள்.
சாலைமறியல்
இவ்வாறு தேங்கிய மழை நீரை வெளியேற்ற கோரி மாணவ- மாணவிகள் காரிமங்கலம்-பாலக்கோடு சாலைக்கு நேற்று திடீரென திரண்டு வந்தனர். அங்கு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த காரிமங்கலம் தாசில்தார் சுகுமார், போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கட்ராமன் மற்றும் போலீசார் அங்கு நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளிக்கப்பட்டது. இதனால் மறியல் போராட்டம் முடிவுக்கு வந்தது.