வாணாபுரம், சங்கராபுரம் பகுதிகளில் திடீர் மழை
வாணாபுரம், சங்கராபுரம் பகுதிகளில் பெய்த திடீர் மழையால் வெப்பம் தணிந்து பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
வாணாபுரம்
கோடைக்காலம் முடிந்த பிறகும் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர். இந்நிலையில் வாணாபுரம் பகுதியில் நேற்று மாலை திடீரென பலத்த காற்று வீசியது. அடுத்த சில நிமிடங்களில் மழை பெய்ய தொடங்கியது. முதலில் லேசான தூறலுடன் பெய்த மழை நேரம் செல்ல செல்ல பலத்த மழையாக கொட்டியது. பள்ளி விடும் நேரத்தில் மழை பெய்ததால் மாணவர்கள் மழையில் நனைந்தபடியே குதூகலத்துடன் வீடுகளுக்கு சென்றதை காண முடிந்தது. சாலையில் வழிந்தோடிய மழைநீர் தாழ்வான பகுதிகளில் குளம்போல் தேங்கியது.
அதேபோல் சங்கராபுரத்தில் நேற்று காலை முதல் மாலை வரை கடும் வெயில் அடித்தது. பின்னர் மாலை 4.30 மணி முதல் 5.15 வரை சுமார் 45 நிமிடம் மழை பெய்தது. இந்த மழையால் பூமி குளிா்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.