குமரியில் வாழை பழம் விலை `கிடுகிடு' உயர்வு ஒரு செவ்வாழை ரூ.20-க்கு விற்பனை

குமரி மாவட்டத்தில் வாழை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு செவ்வாழை ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

Update: 2023-09-23 21:16 GMT

நாகர்கோவில்,:

குமரி மாவட்டத்தில் வாழை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒரு செவ்வாழை ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது.

வாழை பழம்

வாழை விளைச்சலுக்கு பெயர் பெற்ற மாவட்டமாக குமரி மாவட்டம் திகழ்கிறது. இதனால் வாழை பழங்கள் விலை மற்ற மாவட்டங்களை காட்டிலும் சற்று குறைவாக இருக்கும்.

குமரி மாவட்டத்தை பொறுத்தவரையில் நாகர்கோவில் அப்டா மார்க்கெட்டில் மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது. வாரத்தில் திங்கள், செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளி ஆகிய 4 நாட்கள் அப்டா மார்க்கெட்டில் வாழைத்தார் ஏலம் நடக்கிறது. இந்த ஏலத்துக்கு குமரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன. இதுபோக தேனி, மேட்டுப்பாளையம், பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் வாழைத்தார் கொண்டு வரப்படுகிறது.

'கிடுகிடு' உயர்வு

அப்படிப்பட்ட அப்டா மார்க்கெட்டில் வாழைத்தார்கள் விலை கடந்த சில நாட்களாகவே உயர்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாக மற்ற சந்தைகளிலும், கடைகளிலும் வாழை பழம் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அப்டா மார்க்கெட்டில் கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ரூ.40-க்கு விற்பனை ஆன ஒரு கிலோ செவ்வாழை பழம் நேற்று ரூ.80-க்கு விற்பனை ஆனது.

இதே போல ரூ.70 முதல் ரூ.90 வரை விற்பனை ஆகி வந்த மட்டி வாழைப்பழம் தற்போது ரூ.130-க்கு விற்பனை ஆகிறது. மேலும் ஏத்தன்-ரூ.50, பேயன்-ரூ.50, ரசகதளி-ரூ.75, கற்பூரவள்ளி-ரூ.45, மோரிஸ்-ரூ.30, பாளையங்கோட்டை-ரூ.30 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் செவ்வாழை மற்றும் மட்டி வாழை பழங்கள் கடும் விலை உயர்வை சந்தித்து உள்ளது. ஒரு செவ்வாழை பழம் கடைகளில் ரூ.15 முதல் ரூ.20 வரை விற்பனை செய்யப்படுகிறது. அதுவே மட்டி பழம் ரூ.7-க்கு விற்பனை ஆகிறது.

வியாபாரி கருத்து

இதுபற்றி வாழைத்தார் மொத்த வியாபாரி சுரேஷிடம் கேட்டபோது, வெளி மாவட்டங்களில் இருந்து வரும் செவ்வாழை வாழைத்தார் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்ந்துள்ளது. குமரி மாவட்டத்தில் விளையும் வாழைத்தார் மட்டும் விற்பனைக்கு வருகிறது. வரும் நாட்களில் விலை குறையும். புவிசார் குறியீடு கிடைத்ததில் இருந்து மட்டி வாழைப்பழத்தை பொதுமக்கள் அதிகளவு வாங்க தொடங்கி உள்ளனர். இதனால் அதன் விலையும் உயர்ந்து இருக்கிறது. மற்ற வாழை பழங்கள் விலை உயரவில்லை" என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்