ஓடும் லாரியில் திடீர் தீ
ஆம்பூர் அருகே ஓடும் லாரியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
ராணிப்பேட்டை மாவட்டம் வானாபாடியை சேர்ந்தவர் செந்தில். இவருக்கு சொந்தமான லாரியில் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு இரும்பு துகள் பாரம் ஏற்றி செல்லப்பட்டது. திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியை சேர்ந்த மோகன் என்பவர் லாரியை ஓட்டினார். ஆம்பூர் அருகே உள்ள வெங்கிளி வழியாக சென்றபோது இரும்பு துகள்களில் இருந்த புகை வந்தது. சிறிது நேரத்தில் தீ பிடித்து எரியத்தொடங்கியது. இதனை கண்ட டிரைவர் லாரியை உடனடியாக சாலையோரம் நிறுத்தினார்.
இதுகுறித்து ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இது குறித்து ஆம்பூர் தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.