மத்திய சேமிப்பு கிடங்கில் திடீர் தீ;175 டன் ரேஷன் அரிசி மூடைகள் தப்பின

மதுரையில் உள்ள மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்டதால் 175 டன் ரேஷன் அரிசி மூைடகள் தப்பின.

Update: 2022-05-28 21:05 GMT

மதுரை,

மதுரையில் உள்ள மத்திய அரசின் சேமிப்பு கிடங்கில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்டதால் 175 டன் ரேஷன் அரிசி மூைடகள் தப்பின.

மத்திய அரசின் சேமிப்பு கிடங்கு

மதுரை பைபாஸ் சாலை பகுதியில் சுமார் 10 ஏக்கர் பரப்பளவில் மத்திய அரசுக்கு சொந்தமான சேமிப்பு கிடங்கு உள்ளது. இங்கு ஆந்திரா, தெலுங்கானா, சத்தீஸ்கார் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் ரேஷன் அரிசிகள் மற்றும் மத்திய பிரதேசம், பஞ்சாப், அரியானா மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கோதுமைகள் சேமிக்கப்படுவது வழக்கம்.

அதன் பின்னர் இங்கிருந்து மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகங்களுக்கு ரேஷன் அரிசி மற்றும் கோதுமை லாரிகள் மூலம் அனுப்பி வைக்கப்படும். இங்குள்ள 6-வது பிரிவில் சுமார் 175 டன் எடை கொண்ட ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.

புகை மூட்டம்

இந்த நிலையில் நேற்று மாலை 5 மணி அளவில் ரேஷன் அரிசி மூடைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த பகுதியில் குடோனில் பணியாற்றுபவர்கள் பூச்சி மருந்து அடிப்பதற்காக வந்தனர். அப்போது குடோன் முழுவதும் புகை மூட்டமாக காணப்பட்டது. அதிர்ச்சி அடைந்த தொழிலாளர்கள் இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் அங்குள்ள தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இதற்கிடையே பெரியார் தீயணைப்பு நிலைய வீரர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கூடுதல் நிலைய அலுவலர் சலீம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

விசாரணை

தீயணைப்பு வீரர்கள் துரிதமாக செயல்பட்டதன் காரணமாக அந்த பகுதியில் இருந்த சுமார் 175 டன் ரேஷன் அரிசி தீ விபத்தில் இருந்து தப்பியது. தீயில் சேதமடைந்த 50-க்கும் மேற்பட்ட அரிசி மூடைகளை அங்குள்ள தொழிலாளர்கள் உதவியுடன் அதிகாரிகள் அப்புறப்படுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் மின் கசிவின் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்