பூக்கள் விலை திடீர் வீழ்ச்சி; விவசாயிகள் கவலை
பூக்கள் விலை திடீர் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலை அடைந்தனர்.
கரூர் மாவட்டம் வேட்டமங்கலம், குளத்துப்பாளையம், குந்தாணி பாளையம், ஓலப்பாளையம், ஒரம்புப்பாளையம், பேச்சிப்பாறை, நடையனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மலர் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார்கள். இங்கு விளையும் பூக்களை உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கும், பூ ஏல விற்பனை மார்க்கெட்டுகளுக்கு கொண்டு சென்று விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். கடந்த வாரம் குண்டுமல்லிகை (கிலோவில்) ரூ.4 ஆயிரத்திற்கும், முல்லை ரூ.3,500-க்கும், காக்கட்டான் ரூ.2,000-க்கும், கனகாம்பரம் ரூ.3,000-க்கும், சம்பங்கி ரூ.180-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும், அரளி ரூ.250-க்கும், ரோஜா ரூ.250-க்கும் விற்பனையானது. நேற்று குண்டு மல்லிகை ரூ.1,000-க்கும், சம்பங்கி ரூ.60-க்கும், அரளி ரூ.80-க்கும், ரோஜா ரூ.200-க்கும், முல்லை ரூ.1,000-க்கும், செவ்வந்தி ரூ.60-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும், காக்கட்டான் ரூ.800-க்கும் விற்பனையானது. பூக்களின் விலை திடீரென வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.