உசிலம்பட்டி அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீர் சாவு- போலீசார் விசாரணை
உசிலம்பட்டி அருகே பச்சிளம் பெண் குழந்தை திடீரென இறந்தது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி,
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள கோவிலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர், சிவராஜா. இவருடைய மனைவி கருப்பாயி. இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்தநிலையில் மீண்டும் கர்ப்பம் அடைந்த கருப்பாயிக்கு கடந்த 80 நாட்களுக்கு முன்பு உசிலம்பட்டி அரசு மருத்துவமனையில் ஒரு ஆண், ஒரு பெண் என இரட்டை குழந்தைகள் பிறந்தன. இந்த குழந்தைக்கு ராமன், லெட்சுமி என பெயர் சூட்டினர். இதில் ஆண் குழந்தைக்கு பால் குடிப்பதில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக கடந்த மாதம் 12-ந் தேதி மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். மேலும் பெண் குழந்தைக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை அளித்ததாக கூறப்படுகிறது. பின்னர் சிகிச்சை முடிந்து கடந்த 23-ந் தேதி இரு குழந்தைகளும் வீட்டிற்கு கொண்டு வரப்பட்டன. ஆனால், சில தினங்களில் மீண்டும் பெண் குழந்தைக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து நள்ளிரவில் 108 ஆம்புலன்சு மூலம் உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து வந்த வாலாந்தூர் போலீசார், பெண் குழந்தையின் உடலை பரிசோதனைக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பச்சிளம் பெண் குழந்தை இறந்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண் சிசு கொலையா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.