விசாரணை கைதி திடீர் சாவு; உறவினர்கள் சாலை மறியல்

பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2023-06-14 18:59 GMT

பாளையங்கோட்டை சிறையில் விசாரணை கைதி திடீரென்று மயங்கி விழுந்து இறந்தார். இதையடுத்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

கைதி

தென்காசி மாவட்டம் புளியங்குடி பஸ் நிலைய பகுதியைச் சேர்ந்தவர் மாடசாமி. இவருடைய மகன் தங்கச்சாமி (வயது 26). இவர் அந்த பகுதியில் சட்ட விரோதமாக மது விற்றதாக கூறப்படுகிறது.

கடந்த 11-ந் தேதி மது விற்றுக்கொண்டிருந்ததாக புளியங்குடி போலீசார், தங்கச்சாமியை கைது செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர்.

மயங்கி விழுந்து சாவு

இந்த நிலையில் பாளையங்கோட்டை சிறையில் தங்கச்சாமி நேற்று மாலை திடீரென்று மயங்கி விழுந்து கிடந்தார். உடனே அவரை சிறை காவலர்கள் அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்தனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சிறையில் விசாரணை கைதி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் குறித்து நெல்லை மாஜிஸ்திரேட்டு விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

சாலைமறியல்

இதற்கிடையே புளியங்குடி பஸ் நிலையம் முன்பு நேற்று இரவில் தங்கச்சாமியின் உறவினர்கள் திரண்டு திடீர் சாலைமறியலில் ஈடுபட்டனர். தங்கச்சாமியின் இறப்பு குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதனால் திருமங்கலம்- கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனே வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன. சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.


Tags:    

மேலும் செய்திகள்