டாக்டர் மஸ்தான் திடீர் மரணம்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
தி.மு.க. முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் திடீர் மரணம் அடைந்தார். அவரின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தி.மு.க. சிறுபான்மையினர் நல உரிமை பிரிவு மாநில செயலாளர், தமிழக சிறுபான்மை வாரிய துணைத்தலைவராக இருந்தவர் முன்னாள் எம்.பி. டாக்டர் மஸ்தான் (வயது 66). இவரது மகன் திருமண நிச்சயதார்த்தம் கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் நேற்று மாலை நடக்க இருந்தது. இதையொட்டி அனைத்து ஏற்பாடுகளையும் அவர் செய்து வந்தார். முக்கிய பிரமுகர்களுக்கு நேரடியாக அழைப்பும் விடுத்து வந்தார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு கொடுத்துவிட்டு, சென்னையில் இருந்து காரில் சென்றார். காரை அவரது உறவினர் ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது. கூடுவாஞ்சேரி அருகே கார் வந்தபோது அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. நெஞ்சு வலி ஏற்பட்டு வலிப்பு வந்ததாக கூறி அவரை கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மரணம்
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது சாவில் மர்மம் இருப்பதாக சந்தேகம் எழுந்ததால் கூடுவாஞ்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
தொடர்ந்து பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பிரேத பரிசோதனைக்கு பிறகு அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
அஞ்சலி
டாக்டர் மஸ்தான் உடல் ராயப்பேட்டை பாலாஜி நகரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு தி.மு.க. நிர்வாகிகள் அஞ்சலி செலுத்தினார்கள்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின், சென்னை மேற்கு மாவட்டச்செயலாளர் சிற்றரசு, வி.ஜி.ராஜேந்திரன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ. உள்பட ஏராளமானோர் மஸ்தான் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
மகனின் நிச்சயதார்த்தம் நடக்க உள்ள நிலையில் மஸ்தானின் திடீர் மரணம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
முதல்-அமைச்சர் இரங்கல்
டாக்டர் மஸ்தானின் மறைவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணைய துணைத்தலைவருமான மஸ்தான் மறைவெய்தினார் என்ற துயர்மிகு செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அவரது மறைவிற்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன். என் மீது தனி மரியாதையும், பற்றும் பாசமும் மிகுந்தவராக தொடர்ந்து தி.மு.க.வுடன் பயணித்து வந்த மஸ்தான் என்றைக்கும் இயக்க உணர்வை நெஞ்சில் ஏந்தி பணியாற்றிய செயல்வீரர்.
அழைப்பு விடுத்தார்
தி.மு.க.வின் சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளராக - அந்த அணியின் பணி சிறக்க தன்னை முழு மூச்சாக அர்ப்பணித்துக்கொண்டவர். இப்தார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து மிகச்சிறப்புற நடத்துவதில் அவருக்கு நிகர் அவரே. சிறுபான்மையினர் நலன் மட்டுமின்றி, அனைத்து சமுதாய நலனிற்காகவும் முன்னின்று செயலாற்றும் ஒப்பற்ற ஒரு களப பணியாளரை இன்றைக்கு நான் இழந்து தவிக்கிறேன்.
அண்ணா அறிவாலயம் செல்கின்ற நேரங்களில் எல்லாம் அங்கே நின்று என்னை இன்முகத்துடன் வரவேற்கும் அவர் சில நாட்களுக்கு முன்புதான் என்னை இல்லத்தில் நேரில் சந்தித்து தனது மகனின் நிச்சயதார்த்தத்திற்கு அன்போடு அழைத்தார்.
மனித நேயராக, சமூக சேவகராக - தீவிர தி.மு.க. தொண்டராக பணியாற்றிய மஸ்தானின் மறைவு ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் -தொண்டர்களுக்கும்- சிறுபான்மையின சகோதர, சகோதரிகளுக்கும் எனது அனுதாபத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
அ.தி.மு.க.வில் எம்.பி.யாக இருந்தவர்
திடீர் மரணம் அடைந்த டாக்டர் மஸ்தான் அ.தி. மு.க.வில் இருந்து மாநிலங்களவை எம்.பி.யாக கடந்த 1995-ம் ஆண்டு தேர்ந்தெடுக்கப்பட்டார். 2001-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தி.மு.க.வில் அவர் சேர்ந்தார். அவருக்கு தி.மு.க. வில் சிறுபான்மை நல உரிமை பிரிவு செயலாளராக பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது.