ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் வலிப்பு
நெல்லையில் ஓடும் பஸ்சில் திடீரென டிரைவருக்கு திடீரென வலிப்பு ஏற்பட்டது. உடனே சாமர்த்தியமாக செயல்பட்டு பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.
நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து தென்காசிக்கு நேற்று இரவு அரசு பஸ் ஒன்று புறப்பட்டு சென்றது. பஸ்சை தென்காசி மாவட்டம் அனந்தபுரத்தை சேர்ந்த கணேசன் (வயது 40) ஓட்டினார். நெல்லை டவுன் ஆர்ச்சை கடந்து தெற்கு மவுண்ட் ரோடு நோக்கி பஸ் சென்று கொண்டிருந்தது. அங்குள்ள தியேட்டர் முன்பு சென்றபோது டிரைவர் கணேசனுக்கு திடீரென்று வலிப்பு ஏற்பட்டது. உடனே சுதாரித்துக் கொண்ட அவர் சமயோகிதமாக செயல்பட்டு பிரேக் பிடித்து பஸ்சை நிறுத்தினார். மேலும் பஸ் ரோட்டை விட்டு விலகிச் செல்லாத வகையில் ஸ்டீரிங்கை கெட்டியாக பிடித்துக்கொண்டு அதில் சாய்ந்து விழுந்தார்.
இதைக்கண்ட சக பயணிகள் மற்றும் கண்டக்டர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். டிரைவரின் சாமர்த்தியமான செயல்பாட்டால் பஸ்சில் இருந்த 60 பயணிகள் எந்தவித பாதிப்பும் இன்றி தப்பினர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் டவுன் போலீசார் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றனர். மாற்று டிரைவர் மூலம் அந்த பஸ்சை சாலையோரத்துக்கு கொண்டு சென்று நிறுத்தினர். அதே நேரத்தில் பயணிகளை வேறு பஸ்களில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.