சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் மையம் அமைக்க மானியம்
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரிய சக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைப்பதற்கான புதிய திட்டம் செயல்படுத்தப்படுவதாக கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
பராமரிப்பு மையம்
தமிழக அரசு வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலம் வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் "வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகள் பழுதுநீக்கும் பராமரிப்பு மையம் மானியத்தில் அமைக்கும் புதிய திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. விவசாயிகள் தங்கள் வேளாண் எந்திரங்கள் மற்றும் சூரியசக்தியால் இயங்கும் பம்புசெட்டுகளை தங்கள் விளைநிலங்களிலேயே பழுது நீக்கி பராமரிக்கவும், விவசாயிகள் வேளாண் பணிகளை எவ்வித இடர்பாடுகளும் இன்றி குறித்த நேரத்தில் செய்திடவும், கிராமப்புற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி நிலையான வருமானம் ஈட்டி பொருளாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்துடனும் இந்த பராமரிப்பு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தொழில் முனைவோர். விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு இந்த மையங்கள் மானியத்தில் அமைத்துத் தரப்படும். இந்த மையங்கள் ரூ.8 லட்சம் செலவில் அமைக்கப்படுகின்றன. இதில் 50 சதவீத மானிய அடிப்படையில் அதிக பட்சமாக ரூ.4 லட்சம் மானியம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கலாம்
பராமரிப்பு மையங்கள் அமைக்க போதிய இடவசதியும், மும்முனை மின்சார இணைப்பும் கொண்ட கிராமப்புற இளைஞர்கள், தொழில் முனைவோர்கள், விவசாய குழுக்கள் மற்றும் உழவர் உற்பத்தி நிறுவனங்கள் தங்கள் அருகில் உள்ள பொறியியல் துறையின் உதவி செயற்பொறியாளர் (வேளாண் பொறியியல் துறை) அலுவலகத்தை அணுகி விண்ணப்பத்தை சமர்ப்பிக்கலாம். மாவட்ட கலெக்டர் தலைமையிலான மாவட்ட அளவிலான செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் பெற்ற பின்னர் யனாளிகளுக்கு பராமரிப்பு மையம் மானியத்தில் அமைத்துத் தரப்படும். மானியத் தொகை பயனாளியின் வங்கி கணக்கில் பின்னேற்பு மானியமாக செலுத்தப்படும். மேலும் விவரங்களுக்கு அருகில் உள்ள வேளாண் பொறியியல் துறை உதவி செயற்பொறியாளர் அலுவலகத்தை அணுகலாம்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.