சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க மானியம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Update: 2022-11-13 16:32 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் சிமெண்டு விற்பனை நிலையம் அமைக்க மானியம் வழங்கப்படுவதாக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ‌வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சிமெண்டு விற்பனை நிலையம்

தாட்கோ மூலம் செயல்படுத்தப்படும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சரின் அறிவிப்பில் சிமெண்டு விற்பனை நிலையம்அமைக்க ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆதிதிராவிடர் ஒரு நபருக்கு ரூ.90 ஆயிரமும், பழங்குடியினர் ஒரு நபருக்கு ரூ.90 ஆயிரமும் மானியம் இலக்கு நிர்ணயித்து அரசாணை வர பெற்றுள்ளது.

இதில் பயன்பெற ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினராக இருத்தல் வேண்டும், வயது 18 முதல் 65 வயதுவரை இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள் இருக்க வேண்டும். ஜி.எஸ்.டி., பான் அட்டை இருக்க வேண்டும்.

மானியம்

விண்ணப்பதாரர் தாட்கோ திட்டத்தில் இதுவரை மானியம் பெற்றிருக்க கூடாது. தாட்கோவின் மாவட்ட அளவிலான தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்படும் ஆதிதிராவிடர் மற்றும்

பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட்ட பின் சிமெண்டு முகவருக்கான விண்ணப்பங்கள் டான்செம் நிறுவனம் மூலம் பெற்று வழங்கப்படும்.

விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து, தேர்வு குழு மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்பதாரருக்கு தாட்கோ மூலம் ரூ.5000 வைப்புத் தொகை நிறுவனத்திற்கு செலுத்தப்படும். கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய மற்றும் அதிகபட்ச மானியத்தொகை சென்றடைய, ஆதிதிராவிடர் தனிநபருக்கான திட்டத் தொகையில் 30 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.2¼ லட்சம் மானியமும், பழங்குடியினர் தனிநபருக்கான திட்டத் தொகையில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.3.75 லட்சம் மானியமும் விடுவிக்கப்படும்.

இத்திட்டத்தில் பயன் பெற ஆதி திராவிடர்கள் http://application.tahdco.com என்ற இணையதளத்திலும், பழங்குடியினர் http://fast.tahdco.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்து பயன் பெறலாம். மேலும் விவரங்களுக்கு ராணிப்பேட்டை மாவட்ட தாட்கோ மேலாளரை சந்தித்து பயன் பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்